Wednesday, March 26, 2008

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள் conte….3

12. யா அல்லாஹ்! உன்னை அதிகம் ஞாபகம் செய்யக்கூடியவராகவும், உனக்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடியவராகவும், உனக்கு அதிகம் வழிபடுபவராகவும், கட்டுப்படுபவராகவும், அடிபணிபவராகவும் என்னை ஆக்கியருள்வா யாக! என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! என் பாவத்தைப் போக்கி விடுவாயாக! என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! எனக்குரிய ஆதாரத்தை உறுதிப்படுத்துவாயாக! என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! என் நாவை பலப்படுத்துவாயாக! என் உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடுவாயாக!.
13. யா அல்லாஹ்! (சகல) காரியங்களிலும் நிலைத்திருப்பதையும், நேர்வழியில் உறுதியையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். இன்னும் உன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்திடவும் உன்னை அழகிய முறையில் வணங்கிடவும் நான் உன்னிடம் கேட்கின்றேன். தூய்மையான உள்ளத்தையும் உண்மை உரைக்கும் நாவையும் நான் உன்னிடம் கேட்கிறேன். உனக்குத் தெரிந்த நலவுகளைக் கேட்கின்றேன். உனக்குத் தெரிந்த (எல்லாப்) பாவங்களிலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகின்றேன். நீயே மறைவானவற்றை யெல்லாம் மிகவும் நன்கறிந்தவன்!
14. யா அல்லாஹ்! எனக்கு நேர்வழியைக் காட்டுவாயாக! என் ஆத்மாவின் கெடுதிகளிலிருந்து என்னைக் காத்தருள்வாயாக! நற்காரியங்களைச் செய்யவும் வெறுக்கத்தக்க காரியங்களை விட்டு ஏழைகளை நேசிக்கும் தன்மையையும் தந்து என் பாவங்களை மன்னித்து எனக்கு அருள்புரியும்படி நான் உன்னிடம் கேட்கின்றேன். உன் அடியார்களை குழப்பத்தில் ஆழ்த்த நீ விரும்பினால், குழப்பத்தில் ஆழ்த்தப்படாத நிலையிலேயே என்னை உன்னளவில் மரணிக்கச் செய்து விடுவாயாக!
15. யா அல்லாஹ்! உன்னுடைய நேசத்தையும் உன்னை நேசிப்பவர்களின் நேசத்தையும் உன் நேசத்தின் பக்கம் என்னைச் சமீபமாக்கி வைக்கக்கூடிய எல்லா அமல்களின் நேசத்தைபும் நான் உன்னிடம் கேட்கின்றேன். யா அல்லாஹ்! சிறந்த கேள்வியையும் சிறந்த பிரார்த்தனையையும் சிறந்த வெற்றியையும் சிறந்த நன்மையையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். என்னை நீ உறுதிப்படுத்துவாயாக! என்னுடைய தரா சு-வை (நன்மையால்) அதிக எடையுள்ளதாக ஆக்கியருள்வாயாக! என்னுடைய ஈமானை (நம்பிக்கையை) உறுதிப்படுத்துவாயாக! என் அந்தஸ்த்தை உயர்த்துவாயாக! என்னுடைய தொழுகையையும் இன்னும் (ஏனைய) வணக்கங்களையும் ஏற்றுக் கொள்வாயாக! என் பாவங்களை மன்னித்தருள்வாயாக! சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்த்துக்களை நான் உன்னிடம் கேட்கின்றேன்.
16. நன்மைகளின் ஆரம்பங்களையும் முடிவுகளையும் இன்னும் எல்லா நன்மைகளையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். நன்மைகளின் ஆரம்ப, முடிவு, அதன் வெளிப்படை, அந்தரங்கம் மற்றும் சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்த்துக்களை நான் உன்னிடம் கேட்கின்றேன்.
17. யா அல்லாஹ்! என்னுடைய அந்தஸ்தை உயர்த்துவதையும் என் பாவத்தை மன்னிப்பதையும் நீ என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதையும் என் அபத்தை (கற்பை) பத்தினித் தனமாக்குவதையும் நீ என்னுடைய பாவங்களை மன்னிப்பதையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன்.

Tuesday, March 25, 2008

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள் conte….2

6. யா அல்லாஹ்! என் உள்ளத்தில் இறையச்சத்தை ஏற்படுத்துவாயாக! அதனைத் தூய்மைப் படுத்துவாயாக! நீயே அதைத் தூய்மைப் படுத்துபவர்களில் மிகச் சிறந்தவன்! அதனுடைய பொறுப்பாளனும், தலைவனும் நீயே! பிரயோஜனம் இல்லாத அறிவு, பயப்படாத உள்ளம், திருப்தியடையாத மனம் மற்றும் ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
8. யா அல்லாஹ்! நான் செய்த மற்றும் செய்யாத கெட்ட செயல்களிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். யா அல்லாஹ்! உன் அருட்கொடைகள் (என்னைவிட்டு) நீங்குவதை விட்டும், நீ (எனக்கு) அளித்த ஆரோக்கியத்தன்மை (என்னை விட்டு) மாறுவதை விட்டும், உனது திடீர் தண்டனையை விட்டும், உன்னுடைய சகல கோபங்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
9. யா அல்லாஹ்! இடிந்து விழுந்தோ, உயரத்திலிருந்து கீழே விழுந்தோ, மூழ்கியோ, எரிந்தோ இறப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். மரண நேரத்தில் ஷைத்தான் என்னைத் தீண்டுவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (விஷ ஜந்துக்களால்) கொட்டப்பட்டு இறப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். உள்ளத்தில் முத்திரையிடப்படும் அளவுக்கு பேராசை ஏற்படுவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
10. யா அல்லாஹ்! கெட்ட நோய்கள், கெட்ட ஆசைகள், கெட்ட செயல்கள் இன்னும் வெறுக்கத்தக்க குணங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். இன்னும் கடன்கள் அதிகரிப்பதிலிருந்தும், மனிதர்களின் ஆதிக்கத்திலிருந்தும், விரோதிகளின் கேலி கிண்டல்களிலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
11. யா அல்லாஹ்! என்னுடைய மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக! (ஏனெனில்) அதுதான் எனது அரண். எனது உலகை எனக்கு சீர்படுத்துவாயாக! (ஏனெனில்) அதுதான் நான் வாழுமிடம். எனது மறுமையை சீர்படுத்துவாயாக! (ஏனெனில்) அதுதான் நான் திரும்பிச் செல்லுமிடம். எனது வாழ்க்கையில் அதிக நன்மைகள் புரிவதற்கு வாய்ப்பளிப்பாயாக! அனைத்து தீமைகளை விட்டும் விடுபட்டதாக எனது மரணத்தை ஆக்குவாயாக! யா அல்லாஹ்! எனக்கு நீ உதவியாக இருப்பாயாக! எனக்கு எதிராக இருக்காதே! எனக்கு நீ உதவி செய்வாயாக! எனக்கு எதிராக உதவி செய்யாதே! எனக்கு நேர்வழி காட்டுவாயாக! நேர்வழி பெறும் வழியை எனக்கு இலகுபடுத்துவாயாக!.

Monday, March 24, 2008

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள்!

1. யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும் எனது உலக வாழ்விலும் எனது குடும்பத்திலும் எனது செல்வத்திலும் மன்னிப்பையும் நலனையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். யா அல்லாஹ்! என்னுடைய குறைகளை மறைப்பாயாக! யா அல்லாஹ்! என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத் தருவாயாக! யா அல்லாஹ்! எனக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலதுபுறமிருந்தும் இடதுபுறமிருந்தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக! எனக்கு கீழ்புறத்திலிருந்து நான் எதிர்பாராத விதமாகக் கொல்லப்படுவதை உன் வல்லமையைக் கொண்டு நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.
2. யா அல்லாஹ்! எனது உடலில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! எனது செவிப்புலனில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! எனது பார்வையில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வாகிய உன்னைத் தவிர (வேறு) யாருமே இல்லை. இறைநிராகரிப்பை விட்டும் வறுமையை விட்டும் மண்ணறையின் வேதனையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர (வேறு) யாருமில்லை. யா அல்லாஹ்! நீயே என் இரட்சகன்! உன்னைத்தவிர வணங்குவதற்குரியவன் வேறு யாருமில்லை. நீயே என்னைப் படைத்தாய் நான் உன்னுடைய அடிமை நான் என்னால் முடிந்த அளவுக்கு உனது உடன்படிக்கை மற்றும் வாக்குறுதியின் மீது நிலைத்திருக்கிறேன்.
நான் செய்த சகல தீமையைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். நீ எனக்களித்த அருட்கொடைகளைக் கொண்டு உன்பக்கமே நான் மீளுகிறேன். இன்னும் என்னுடைய பாவங்களை (மனமாற) ஒப்புக் கொள்கிறேன். எனவே என்னை நீ மன்னித்தருள்வாயாக! உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. யா அல்லாஹ்! கவலையிலிருந்து (துயரத்திலிருந்து) நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். இன்னும் இயலாமை மற்றும் சோம்பேறித்தனத்திலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகின்றேன்.
இன்னும் கடன் அதிகரிப்பதிலிருந்தும் மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகின்றேன். யா அல்லாஹ்! இந்த நாளின் ஆரம்பத்தைச் சீர்திருத்தம் உள்ளதாகவும் அதன் நடுவை வெற்றியுள்ளதாகவும் அதன் கடைசியை லாபம் உள்ளதாகவும் ஆக்கியருள்வாயாக! அருளாளர்களுக்கெல்லாம் அருளாளனே! ஈருலக நலவையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.
3. விதியை பொருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் மரணத்திற்குப் பின் குளிர்ந்த (சுவர்க்க) வாழ்வையும், வழிகேட்டின் குழப்பத்திலும் தீய விளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டுவிடாது உன்னைச் சந்திப்பதின் ஆசையையும் உன் திருமுகத்தைப் பார்ப்பதில் அடையும் இன்பத்தையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன்.
நான் யாருக்கும் அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது யாராவது எனக்கு அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது நான் அத்துமீறுவதிலிருந்தும் அல்லது யாராவது என்மீது அத்துமீறுவதிலிருந்தும் அல்லது நீ மன்னிக்காத தவறு மற்றும் பாவங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
4. மிக நீளமான வயது வரை உயிர் வாழ்வதிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். நல்ல அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் எனக்கு நீ நேர்வழி காட்டுவாயாக! அந்த நல் அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் உன்னைத் தவிர வேறு யாரும் நேர்வழி காட்டமுடியாது! கெட்ட செயல்கள் மற்றும் கெட்ட குணங்களிலிருந்தும் என்னைத் திருப்பிவிடுவாயாக! அப்படிப்பட்ட கெட்ட அமல்கள் மற்றும் கெட்ட குணங்களிலிருந்து உன்னைத்தவிர யாரும் என்னைத்திருப்ப முடியாது! 5. யா அல்லாஹ்! என் மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக! என் வீட்டை எனக்கு நீ விஸ்தீரணப்படுத்துவாயாக! என் உணவில் நீ அருள்புரிவாயாக! கல் நெஞ்சம், பொடுபோக்கு மற்றும் ஏழ்மையிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன். இன்னும் இறைநிராகரிப்பு பாவச்செயல் பிரிவை ஏற்படுத்துதல் மற்றும் பிறர் பார்க்க வேண்டும் கேட்க வேண்டும் என்ற முகஸ்துதியிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். செவிடு, குருடு, உறுப்புக்கள் அழுகிவிடும் நோய் இன்னும் கெட்ட (எல்லா) நோய்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். cont....

Thursday, March 20, 2008

சிறுபான்மையினருக்கான உயர்கல்வி பயிற்சி மையம்

முஸ்லிம் சமுதாயம் சர்வதேச அளவில் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்படுவதை எதிர்த்து அவர்களால் உரிமைக்குரல் கொடுக்க இயலாமல் போவதற்கும், அரசியல் விளையாட்டில் பகடைக்காயாய் ஆங்காங்கே உருண்டு கொண்டிருப்பதற்கும் அவர்களிடையே நிலவும் "அறியாமை" ஒரு மிகப் பெரும் காரணியாகத் திகழ்கிறது என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

விழித்துக் கொண்ட ஒரு சிலர், சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் அறியாமை எனும் இருளைப் போக்கிடும் 'அறிவொளி' யைப் பாய்ச்சி ஆங்காங்கே வெளிச்சம் கொணர முயற்சித்தும் பெருமளவில் சமுதாயத்திற்குப் பலன் கிடைக்காததற்குக் காரணம், சிகிச்சை முறைகள் பற்றிய போதிய அறிவு இல்லாததும், அப்படியே கல்விக்கான வாய்ப்பு முஸ்லிம்களுக்குக் கிடைத்தாலும் அதனைப் புறந்தள்ளும் அலட்சிய மனோபாவமும் தான் என்பது வருந்தத்தக்கதொரு உண்மையாகும்.

அத்தகையதோர் விழிப்புணர்வை சிறுபான்மைச் சமுதாயத்தினரும் பெற்றுக்கொள்ளும் விதத்தில் அரியதோர் திட்டம் ஒன்று திரு. சைதை துரைசாமி அவர்களால் சென்னையில் மனிதநேய அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஐ.ஏ.எஸ்.(Indian Administrative Service), ஐ.எஃப்.எஸ்.(Indian Foreign Service) மற்றும் ஐ.பி.எஸ் (Indian Police Service)போன்ற உயர்கல்விகளுக்கான தேர்வுகளில் வெற்றிபெற மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக அளிக்க இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இம் மையத்தின் அறக்காவலரான திரு. சைதை துரைசாமி அவர்கள் தொடங்கி உள்ள இந்த மையத்தில் சாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுத இலவச பயிற்சி, குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வகுப்பறைகள், இலவச பாடநூல்கள், இலவசமாக தங்குமிடம், தரமான உணவு வகைகள், தனித்தனியாக பத்திரிகைகள் ஆகியவை வழங்கப்பட்டு திறமை மிகுந்த பயிற்றுனர்களால் பாடம் கற்பிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சி மையத்தில், ஐ.ஏ.எஸ். தேர்வின் மாதிரி வடிவ பயிற்சிகள் வாரம்தோறும் நடத்தப்படுகின்றன. கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஐ.ஏ.எஸ். பிரதானத் தேர்வின் முடிவு நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இலவச பயிற்சி மையத்தில் படித்த 17 மாணவ-மாணவிகளில் ஒரு மாணவி உள்பட 8 பேர் தேர்வுபெற்று நேர்முகத்தேர்வுக்குச் செல்ல உள்ளனர். சென்னை, ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா ஒரு மாணவரும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 2 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் புவியியல், வரலாறு, பொது நிர்வாகம், அரசியல் அறிவியல், சமூகவியல், வணிகவியல் ஆகியவற்றை முதல் விருப்பப் பாடமாக எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இந்த மாணவர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கான தரமான பயிற்சியும், அவர்கள் டெல்லி சென்று தேர்வை எதிர்கொள்ள தேவையான வழிகாட்டுதலும் வழங்கப்படும் என்றும், நேர்முகத்தேர்வுக்கான பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் இந்த மையத்தை நேரில் அணுகலாம் என்றும் சைதை துரைசாமி கூறியுள்ளார். தற்போது இந்த மையத்தில், 2008-ம் ஆண்டுக்கான முதல்நிலை தேர்வு எழுத 100 மாணவர்கள் பயிற்சி பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை பிரிவு மக்களுக்கு முதலிடமும், பெண்களுக்கு 33 சதவீதமும் ஒதுக்கப்பட்டு ஐந்து மாதப் பயிற்சி வகுப்புக்களை முற்றிலும் இலவசமாக வழங்கும் இந்த ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கான இப்பயிற்சி மையத்தின் முகவரி:

The IAS and IPS Free Coaching Centre, 28, First Main Road, West CIT Nagar, Chennai-600 035. Phone : 044 2433 0952 / 2433 0095Mobile : 9282 202151
சத்தியமார்க்கம்.காம்

Thursday, March 13, 2008

இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை!

இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.. "மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடைவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கண்ணியமிக்கவர்" (சங்கைமிகு அல்குர்ஆன் 49:13)
இந்த இறை வசனத்தை அறியாதவர்கள் நம்மில் இருக்க முடியாது. இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், உலக மக்கள் அனைவரும் ஒரு தொப்புள் கொடியின் வழியே வந்த வழித்தோன்றல்கள்தான். நம்மில் ஏற்படுத்தப்பட்ட கோத்திரங்கள் அனைத்தும் நாம் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளத்தானே தவிர பிரிவினை பாராட்டி, பிரிந்து போவதற்கன்று என இவ்விறை வசனம் வலியுறுத்துகிறது. ஆனால் நாம் இன்று எப்படி வாழ்கின்றோம்?
ஒற்றுமை என்ற வார்த்தை நம்மிடம் உப்பிற்காவது இருக்கிறதா?
வீட்டுக்கு வீடு சண்டையில் தொடங்கி, நாட்டுக்கு நாடு இரத்தம் ஓட்டுவது வரை, ஒற்றுமை என்ற சொல்லே முஸ்லிம்களிடம் கேலிப் பொருளாகிப் போனது. ஐந்து அறிவு படைத்த மிருகங்கள் கூட உணவிற்காவே அன்றி கொலை செய்வதில்லை; சண்டை போடுவது இல்லை. அவை தன் இனத்தைக் கொல்வதில்லை. ஆனால் ஆறாம் அறிவு என்ற பகுத்தறிவு ஆற்றலைப் பெற்ற, ஆகாயத்தைத் தொடும் அளவு உயர்ந்த நம் மனித சமுதாயம் மட்டும் தன்னைத் தானே அழித்துக் கொள்வதில் தீராத வேட்கை கொண்டு திரிகிறது.
நாட்டுக்கு நாடு போர் தொடுப்பதால் அழிவுகளும் அதிகம்; உயிரிழப்புகளும் அதிகம். உள் நாட்டுக்குள் கலவரம் நடக்கும் போதும் பறிபோவது அப்பாவிகளின் உயிர்தான். இதற்கெல்லாம் காரணம் நம்மில் ஒற்றுமை இல்லை; நாமெல்லாம் சகோதரர்கள் என்ற எண்ணமில்லை. அடிப்பவனும், அடிக்கப்படுபவனும் ஒரு தாய்-தந்தை வழித் தோன்றல் என்ற எண்ணமில்லை. மாறாக மத வெறி, நிற வெறி, பதவி வெறி, இன வெறி ஆகியவற்றால் மனிதநேயம் மரணித்து எதிரி மனப்பான்மை எங்கெங்கும் தலை விரித்தாடிக் கொண்டிருக்கிறது. முடிவிற்கு வராமல் மனித உயிர்களைக் கொன்று குவிக்கும் பிரச்சனைகள் உலகில் எவ்வளவு இருக்கின்றன?
அமெரிக்கா-ஈராக், இஸ்ரேல்-பாலஸ்தீன், இந்தியா-பாகிஸ்தான் இவை அல்லாமல் எத்தனையொ நாடுகள் நல்லுறவு இல்லாமல் உதட்டில் சிரிப்பும் உள்ளத்தில் வஞ்சமும் வைத்துத் திரிக்கின்றன. இவற்றின் விளைவு மனித உயிர்கள், பெண்களின் கற்பு, பாடுபட்டுச் சேர்த்த சொத்துகள், வீடுகள், உடமைகள் அனைத்தும் பறிபோகின்றன. குழந்தைகளின் வயிற்று பசியின் அழுகைச் சத்தம் விண்ணை முட்டுகிறது. ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கோத்திரங்கள் நிறவெறிச் சாயம் பூசப்பட்டு, கறுப்பர்களை அருவெருக்கத்தக்க அஃறிணைப் பொருளைப் போன்று கடத்தி வந்து வியாபார சந்தையில் விற்றனர் வெள்ளைநிற வெறியர்கள். அன்று ஆரம்பம் ஆன நிறவெறி இன்றும் முடிவுக்கு வரவில்லை. மதவெறி பிடித்த மிருகங்களுக்கு, குஜராத் முஸ்லிம் சமுதாயம் இரையானது. பக்கத்து வீட்டுக்காரனே பரிதாபம் இன்றி படுபாதகச் செயல்களைச் செய்தான். பாலஸ்தீனுக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை பச்சிளங்குழந்தைகளை நாளுக்குநாள் கொன்று குவித்து வருகிறது. பதவி வெறி பிடித்த பேய்களுக்குப் பலியாகும் பாலஸ்தீனிலும் ஈராக்கிலும் பிணக்குவியல்கள்தான் நாள்தோறும் பெருகி வருகின்றன. இப்படிப்பட்ட கேவலமான, வெறி பிடித்த செயல்களுக்குக் காரணம்

மனிதாபிமானம் மாண்டு விட்டது. மீண்டும் மனிதாபிமானத்தை எழுப்ப வேண்டுமானால், இஸ்லாம் என்ற உயிர் நீர் தெளிக்கப்பட வேண்டும். "தன் பக்கத்திலிருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறை நம்பிக்கையாளராக இருப்பதில்லை" என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : மிஷ்காத்).இப்படிப்பட்ட நபிமொழி வழிநடந்தால் பட்டினி சாவிற்குப் பூட்டுப் போடலாம் அல்லவா? "அல்லாஹ்வின் தூதரே! எவன் இறை நம்பிக்கையில்லாதவன்?" என வினவப்பட்டபோது, "எவனுடைய அண்டை வீட்டார் அவரின் துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன்" என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி) - ஆதாரம் - புகாரி, முஸ்லிம்).இப்படிப்பட்ட நபி மொழியின் வழிநடந்து பாதுகாப்பையும் பாசத்தையும் ஏற்படுத்தலாம் அல்லவா? இவை எல்லாவற்றிற்கும் மேலாக இருண்ட காலம் என்ற அழைக்கப்படும் அறியாமைக் காலத்தில் தோன்றிய ஒளி மயமான இஸ்லாம் மனிதர்களுக்குள் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் உறங்கிக் கிடந்த மனித நேயத்தையும் தட்டி எழுப்பியதே! அன்று உயர் குலத்தைச் சார்ந்த அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலி) ஹப்பாப் (ரலி) போன்றோருக்கு - தன் நாட்டை, வீட்டை, மனைவி, மக்களைத் துறந்து சென்ற முஹாஜிர்களுக்கு - அனைத்திலும் சரி பாதி தருகிறோம் என்று சொன்ன அன்ஸாரிகள் அனைவரும் மனித நேயத்தின் ஊற்றுகள். இப்படிப்பட்ட உயர்ந்து பரந்த தியாக மனப்பான்மை அந்த அறியாமைக்காலத்து மக்களிடம் வரக் காரணம் இஸ்லாம். இஸ்லாம் என்றால் கட்டுப்படுதல். தன்னுள் புகும் ஒவ்வொரு மனிதனையும் கட்டுப்பாட்டுக்குள் நுழைத்துக் காத்து வந்தது இஸ்லாம். கட்டுப்பாடு என்றால் சிறையில் அடைத்து, சித்திரவதை செய்யும் கட்டுப்பாடன்று. மாறாக, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்யும் கட்டுப்பாடு. வார்த்தை

பேசுதல் முதல் வழக்காடுவது வரை, உண்ணுதல் முதல் உறங்குதல் வரை கற்றுத் தந்து மனிதப் பிறவியைக் கண்ணியப்படுத்துகிறது இஸ்லாம். ஓரிறைக் கொள்கை முதல் ஒழுக்க வரைமுறைகள் வரை அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இஸ்லாம், இம்மனித சமுதாயத்தைச் சீர்படுத்தி, சீர்திருத்தி நன்னெறிப்படுத்தி ஒற்றுமையாக வாழ வைக்க வந்த வாழ்க்கை நெறியாகும். இறைவனால் இறக்கியருளப் பெற்ற திருக்குர்ஆன் என்னும் உலகப் பொதுமறை பறை சாற்ற நினைப்பது சமூக ஒற்றுமையைத்தான். நபி (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையின் போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறி சமூகப் பிளவுக்கு முடிவு தந்து விட்டு சென்றார்கள். அது, "கறுப்பர்களை விட வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் இல்லை; அரபியர்களை விட அரபி அல்லாதவர்கள் தாழ்ந்தவரும் இல்லை" என்னும் உலகளாவிய சமநிலைச் சமுதாயப் பிரகடனமாகும். இவ்வாக்கு ஒன்றே போதும் சமுதாய ஒற்றுமைக்கு.
நாம் அனைவரும் இறைவனின் படைப்புகள். நம்மில் எந்தப் பேதமும் ஏற்றத் தாழ்வும் இருக்கக்கூடாது. அதையும் மீறி நிகழும் அநீதிகளுக்குத் திருக்குர்ஆனும், நபி மொழியும் தான் தீர்வே தவிர வேறில்லை. கண்ணியத்தைப் பேணி,கற்பொழுக்கத்தை நிலை நாட்டி,காட்டு மிராண்டித் தனத்தை ஒழித்து,கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து,ஒற்றுமை என்னும் கயிற்றைப்பற்றி பிடித்து வாழ்வோமாக..! நாம் அனைவரும் ஒருசமூக மக்கள்; ஒரு தாய் மக்கள். நாம் அனைவரும் இறைவனின் அடிமைகளே..! வாழ்வும் வாழ்வாதாரங்களும் வல்லோன் வழங்குபவை. பிரிவை அழித்து, உறவை வளர்த்து, சமூக ஒற்றுமை காண்போம், இஸ்லாம் கூறும் வழியில்.

Friday, March 7, 2008

பரங்கிப்பேட்டடையில் ஐ.டி.ஜே மதரஸா மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது!

பரங்கிப்பேட்டடையில் 08.03.2008 அன்று ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் மதரஸா மாணவ மாணவிகளுக்கு மாதாந்திர பரிசுகளை சவுதி அரேபியா ஜிந்தா முன்னாள் பி.எம்.எ தலைவர் ஜி.அப்துல் சமது வழங்கினார். மதரஸா மாணவ மாணவிகளுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டது. இறுதியாக நகர ஐ.டி.ஜே செயலாளர் பி.எம்.அப்துல் ஹமீதுஅவர்கள் நன்றியுரை கூறினார்.

வேண்டாமே மௌலீது பாத்திஹா!