Thursday, March 13, 2008

இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை!

இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.. "மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடைவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கண்ணியமிக்கவர்" (சங்கைமிகு அல்குர்ஆன் 49:13)
இந்த இறை வசனத்தை அறியாதவர்கள் நம்மில் இருக்க முடியாது. இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், உலக மக்கள் அனைவரும் ஒரு தொப்புள் கொடியின் வழியே வந்த வழித்தோன்றல்கள்தான். நம்மில் ஏற்படுத்தப்பட்ட கோத்திரங்கள் அனைத்தும் நாம் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளத்தானே தவிர பிரிவினை பாராட்டி, பிரிந்து போவதற்கன்று என இவ்விறை வசனம் வலியுறுத்துகிறது. ஆனால் நாம் இன்று எப்படி வாழ்கின்றோம்?
ஒற்றுமை என்ற வார்த்தை நம்மிடம் உப்பிற்காவது இருக்கிறதா?
வீட்டுக்கு வீடு சண்டையில் தொடங்கி, நாட்டுக்கு நாடு இரத்தம் ஓட்டுவது வரை, ஒற்றுமை என்ற சொல்லே முஸ்லிம்களிடம் கேலிப் பொருளாகிப் போனது. ஐந்து அறிவு படைத்த மிருகங்கள் கூட உணவிற்காவே அன்றி கொலை செய்வதில்லை; சண்டை போடுவது இல்லை. அவை தன் இனத்தைக் கொல்வதில்லை. ஆனால் ஆறாம் அறிவு என்ற பகுத்தறிவு ஆற்றலைப் பெற்ற, ஆகாயத்தைத் தொடும் அளவு உயர்ந்த நம் மனித சமுதாயம் மட்டும் தன்னைத் தானே அழித்துக் கொள்வதில் தீராத வேட்கை கொண்டு திரிகிறது.
நாட்டுக்கு நாடு போர் தொடுப்பதால் அழிவுகளும் அதிகம்; உயிரிழப்புகளும் அதிகம். உள் நாட்டுக்குள் கலவரம் நடக்கும் போதும் பறிபோவது அப்பாவிகளின் உயிர்தான். இதற்கெல்லாம் காரணம் நம்மில் ஒற்றுமை இல்லை; நாமெல்லாம் சகோதரர்கள் என்ற எண்ணமில்லை. அடிப்பவனும், அடிக்கப்படுபவனும் ஒரு தாய்-தந்தை வழித் தோன்றல் என்ற எண்ணமில்லை. மாறாக மத வெறி, நிற வெறி, பதவி வெறி, இன வெறி ஆகியவற்றால் மனிதநேயம் மரணித்து எதிரி மனப்பான்மை எங்கெங்கும் தலை விரித்தாடிக் கொண்டிருக்கிறது. முடிவிற்கு வராமல் மனித உயிர்களைக் கொன்று குவிக்கும் பிரச்சனைகள் உலகில் எவ்வளவு இருக்கின்றன?
அமெரிக்கா-ஈராக், இஸ்ரேல்-பாலஸ்தீன், இந்தியா-பாகிஸ்தான் இவை அல்லாமல் எத்தனையொ நாடுகள் நல்லுறவு இல்லாமல் உதட்டில் சிரிப்பும் உள்ளத்தில் வஞ்சமும் வைத்துத் திரிக்கின்றன. இவற்றின் விளைவு மனித உயிர்கள், பெண்களின் கற்பு, பாடுபட்டுச் சேர்த்த சொத்துகள், வீடுகள், உடமைகள் அனைத்தும் பறிபோகின்றன. குழந்தைகளின் வயிற்று பசியின் அழுகைச் சத்தம் விண்ணை முட்டுகிறது. ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கோத்திரங்கள் நிறவெறிச் சாயம் பூசப்பட்டு, கறுப்பர்களை அருவெருக்கத்தக்க அஃறிணைப் பொருளைப் போன்று கடத்தி வந்து வியாபார சந்தையில் விற்றனர் வெள்ளைநிற வெறியர்கள். அன்று ஆரம்பம் ஆன நிறவெறி இன்றும் முடிவுக்கு வரவில்லை. மதவெறி பிடித்த மிருகங்களுக்கு, குஜராத் முஸ்லிம் சமுதாயம் இரையானது. பக்கத்து வீட்டுக்காரனே பரிதாபம் இன்றி படுபாதகச் செயல்களைச் செய்தான். பாலஸ்தீனுக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை பச்சிளங்குழந்தைகளை நாளுக்குநாள் கொன்று குவித்து வருகிறது. பதவி வெறி பிடித்த பேய்களுக்குப் பலியாகும் பாலஸ்தீனிலும் ஈராக்கிலும் பிணக்குவியல்கள்தான் நாள்தோறும் பெருகி வருகின்றன. இப்படிப்பட்ட கேவலமான, வெறி பிடித்த செயல்களுக்குக் காரணம்

மனிதாபிமானம் மாண்டு விட்டது. மீண்டும் மனிதாபிமானத்தை எழுப்ப வேண்டுமானால், இஸ்லாம் என்ற உயிர் நீர் தெளிக்கப்பட வேண்டும். "தன் பக்கத்திலிருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறை நம்பிக்கையாளராக இருப்பதில்லை" என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : மிஷ்காத்).இப்படிப்பட்ட நபிமொழி வழிநடந்தால் பட்டினி சாவிற்குப் பூட்டுப் போடலாம் அல்லவா? "அல்லாஹ்வின் தூதரே! எவன் இறை நம்பிக்கையில்லாதவன்?" என வினவப்பட்டபோது, "எவனுடைய அண்டை வீட்டார் அவரின் துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன்" என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி) - ஆதாரம் - புகாரி, முஸ்லிம்).இப்படிப்பட்ட நபி மொழியின் வழிநடந்து பாதுகாப்பையும் பாசத்தையும் ஏற்படுத்தலாம் அல்லவா? இவை எல்லாவற்றிற்கும் மேலாக இருண்ட காலம் என்ற அழைக்கப்படும் அறியாமைக் காலத்தில் தோன்றிய ஒளி மயமான இஸ்லாம் மனிதர்களுக்குள் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் உறங்கிக் கிடந்த மனித நேயத்தையும் தட்டி எழுப்பியதே! அன்று உயர் குலத்தைச் சார்ந்த அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலி) ஹப்பாப் (ரலி) போன்றோருக்கு - தன் நாட்டை, வீட்டை, மனைவி, மக்களைத் துறந்து சென்ற முஹாஜிர்களுக்கு - அனைத்திலும் சரி பாதி தருகிறோம் என்று சொன்ன அன்ஸாரிகள் அனைவரும் மனித நேயத்தின் ஊற்றுகள். இப்படிப்பட்ட உயர்ந்து பரந்த தியாக மனப்பான்மை அந்த அறியாமைக்காலத்து மக்களிடம் வரக் காரணம் இஸ்லாம். இஸ்லாம் என்றால் கட்டுப்படுதல். தன்னுள் புகும் ஒவ்வொரு மனிதனையும் கட்டுப்பாட்டுக்குள் நுழைத்துக் காத்து வந்தது இஸ்லாம். கட்டுப்பாடு என்றால் சிறையில் அடைத்து, சித்திரவதை செய்யும் கட்டுப்பாடன்று. மாறாக, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்யும் கட்டுப்பாடு. வார்த்தை

பேசுதல் முதல் வழக்காடுவது வரை, உண்ணுதல் முதல் உறங்குதல் வரை கற்றுத் தந்து மனிதப் பிறவியைக் கண்ணியப்படுத்துகிறது இஸ்லாம். ஓரிறைக் கொள்கை முதல் ஒழுக்க வரைமுறைகள் வரை அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இஸ்லாம், இம்மனித சமுதாயத்தைச் சீர்படுத்தி, சீர்திருத்தி நன்னெறிப்படுத்தி ஒற்றுமையாக வாழ வைக்க வந்த வாழ்க்கை நெறியாகும். இறைவனால் இறக்கியருளப் பெற்ற திருக்குர்ஆன் என்னும் உலகப் பொதுமறை பறை சாற்ற நினைப்பது சமூக ஒற்றுமையைத்தான். நபி (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையின் போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறி சமூகப் பிளவுக்கு முடிவு தந்து விட்டு சென்றார்கள். அது, "கறுப்பர்களை விட வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் இல்லை; அரபியர்களை விட அரபி அல்லாதவர்கள் தாழ்ந்தவரும் இல்லை" என்னும் உலகளாவிய சமநிலைச் சமுதாயப் பிரகடனமாகும். இவ்வாக்கு ஒன்றே போதும் சமுதாய ஒற்றுமைக்கு.
நாம் அனைவரும் இறைவனின் படைப்புகள். நம்மில் எந்தப் பேதமும் ஏற்றத் தாழ்வும் இருக்கக்கூடாது. அதையும் மீறி நிகழும் அநீதிகளுக்குத் திருக்குர்ஆனும், நபி மொழியும் தான் தீர்வே தவிர வேறில்லை. கண்ணியத்தைப் பேணி,கற்பொழுக்கத்தை நிலை நாட்டி,காட்டு மிராண்டித் தனத்தை ஒழித்து,கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து,ஒற்றுமை என்னும் கயிற்றைப்பற்றி பிடித்து வாழ்வோமாக..! நாம் அனைவரும் ஒருசமூக மக்கள்; ஒரு தாய் மக்கள். நாம் அனைவரும் இறைவனின் அடிமைகளே..! வாழ்வும் வாழ்வாதாரங்களும் வல்லோன் வழங்குபவை. பிரிவை அழித்து, உறவை வளர்த்து, சமூக ஒற்றுமை காண்போம், இஸ்லாம் கூறும் வழியில்.

Friday, March 7, 2008

பரங்கிப்பேட்டடையில் ஐ.டி.ஜே மதரஸா மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது!

பரங்கிப்பேட்டடையில் 08.03.2008 அன்று ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் மதரஸா மாணவ மாணவிகளுக்கு மாதாந்திர பரிசுகளை சவுதி அரேபியா ஜிந்தா முன்னாள் பி.எம்.எ தலைவர் ஜி.அப்துல் சமது வழங்கினார். மதரஸா மாணவ மாணவிகளுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டது. இறுதியாக நகர ஐ.டி.ஜே செயலாளர் பி.எம்.அப்துல் ஹமீதுஅவர்கள் நன்றியுரை கூறினார்.

வேண்டாமே மௌலீது பாத்திஹா!




Thursday, March 6, 2008

இயற்கையும் செயற்கையும்

இயற்கையில் நானறிந்தது இரு வகை
ஒன்று தானாகவே அமைந்த இயற்கை
மற்றது மனிதன் கற்பனையில் உருவாக்கிய இயற்கை
எதிர்மறை குணம் கண்டுபிடித்த செயற்கையான இயற்கை

பூனை குறுக்கே செல்வது இயற்கை – அதனால்
வீணே காரியம் நிறுத்துவது செயற்கை
வீட்டில் பூனை குறுக்கிடும் ஆயிரம் முறை
ரோட்டில் ஒருமுறை குறுக்கிட்டாலே அது சறுக்கலாம்

எங்கே செல்கிறீர் என கேட்பது இயற்கை – சாவின்
சங்கே ஊதியது போல் அஞ்சுவது செயற்கை
மனதில் வெள்ளையை போற்றும் மனிதன்
உடையில் வெள்ளையை தரித்திரம் என்கிறான்

கல்லில் கால் தடுப்பது இயற்கை
முள்ளைபோல் உதறாமல் அல்லாடுவது செயற்கை
புல்லுருவிகள் கோள் சொல்வது இயற்கை
புல்லைபோல் எறியாமல் தோள்சுமப்பது செயற்கை

காக்கை கரைவது இயற்கை
விருந்தை எண்ணி கருமி கரைவது செயற்கை
மூக்குக் கண்ணாடி உடைவது இயற்கை
மூக்கே உடைந்தது போல் அலறுவது செயற்கை

தலையில் பல்லி விழுந்தால் இயற்கை
தலையே போனதுபோல் அழுதால் செயற்கை
ஒன்றிலிருந்து ஒன்பதுவரை எண்கள் – இயற்கை
அதில் சில அதிர்ஷ்டம் என்பது செயற்கை

செவ்வாய் தோஷம் - எதிர்காலத்தின் மோசம்
தோஷக்காரர்களின் வாழ்வே நாசம்
அறிவுக்கே ஒவ்வா ஒரு கோஷம்
ஆயுள் ரேகை கட்டை – அது இயற்கை
வாழ்வு குட்டை – இது செயற்கை

விமானத்தில் பிணமானவர்களைக் கேட்டேன்
புயலில் சுயம் இழந்தவர்களை படித்தேன்
கடல் நீரில் உடல் போனவர்களை வாசித்தேன்
சுனாமியில் சின்னாபின்னமானவர்களைக் கண்டேன்

அனைவரின் ஆயுள் ரேகை குட்டையுமில்லை
செவ்வாய் தோஷமுமில்லை
அதிர்ஷ்ட எண்களும் ஒன்றிலிருந்து ஒன்பது வரை

இயற்கை அளித்தது சிம்மாசன இருக்கை
மாற்றவில்லை மனிதன் தன் சிந்தனை போக்கை

- ஜாஃபர் சாதிக்

Monday, March 3, 2008

முஸ்லிம் இளைஞர்களுக்காகச் சட்ட உதவிக் குழு உதயம்!

புதன், 27 பெப்ரவரி 2008
புதுதில்லி: தீவிரவாதத் தொடர்பு படுத்திக் கைது செய்து கொடுமைப்படுத்தப்படும் முஸ்லிம் இளைஞர்களுக்குச் சட்டரீதியாக உதவி செய்ய உத்தரபிரதேசத்தில் உள்ள பல்வேறு முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றிணைந்து களம் இறங்குகின்றன. நாடு முழுவதும் முஸ்லிம் இளைஞர்களைத் தீவிரவாதத்தின் பெயர் கூறி கைது செய்யப்படுவதும் தொடர்ந்து அதே காரணம் கூறி அவர்களுக்குச் சட்ட உதவிகள் கிடைப்பது தடை செய்யப்படுவதும் பரவலாக நடைபெற ஆரம்பித்துள்ளது.
இதனையடுத்து, உத்தரபிரதேச மாநிலத்தில் முஸ்லிம் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு செயல்பட்டு வரும் வழக்கறிஞர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தின் இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு இயக்கம் என்ற பொருள்படும் ஆதங்க்வாத் விரோதி ஆந்தோலன் (AVA) என்ற அமைப்பின் கீழ் அவ்வாறு சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படும் முஸ்லிம் இளைஞர்களுக்குச் சட்ட உதவி கிடைக்கும் வகையில் ஒரு சட்ட உதவிக் குழு உருவாக்கப்பட்டது."சந்தேகத்தின் பெயரில் கொடூரமாகக் கொடுமைபடுத்தப்படுபவர்களுக்கு சட்டரீதியாக நியாயம் கிடைக்க வழிவகை செய்வதே எங்கள் நோக்கம்" என உருவாக்கப்ப்பட்டச் சட்ட உதவி குழுவின் பொறுப்பாளர் சஃபர்பாய் ஜீலானி அறிவித்தார். ஃபைஸாபாத், வாரணாசி, லக்னோ போன்ற பகுதிகளிலுள்ள நீதிமன்ற வளாங்கங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பின்னர் தீவிர்வாதம் தொடர்பான வழக்குகளை எடுப்பதில்லை என வழக்கறிஞர் அமைப்புகள் (Bar Associations) தீர்மானம் செய்திருந்தன. இத்தகையச் சூழலில் முஸ்லிம் இளைஞர்களின் மீது தீவிரவாதத் தொடர்புக் குற்றச்சாட்டுகள் சுமத்தி வழக்குகளில் சிக்க வைக்கும் செயல் நாடுமுழுவதும் அதிகரித்ததைக் கணக்கில் எடுத்தே உத்தரபிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்யும் விதத்தில் சட்ட உதவிக்குழு அமைக்க முடிவு செய்தன."Bar Association வழக்கறிஞர் அமைப்புகளைப் பகைத்துக் கொள்ளாமல் அவர்களுடன் இணைந்தே சட்ட உதவி குழு செயல்பட முயற்சிகளை மேற்கொள்ளும்" என சட்ட உதவிகுழுவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இந்தச் சட்ட உதவிகுழு செயல்படும் அமைப்பான AVA-க்கு 12 நிர்வாக உறுப்பினர்கள் அடங்கிய ஓர் குழுவும் 35 செயல்பாட்டு உறுப்பினர்கள் அடங்கிய ஓர் குழுவும் செயல்படும். இதில் 6 உறுப்பினர்கள் பல்வேறு நீதிமன்றங்களில் உள்ள பிரபலமான வழக்கறிஞர்களாவர். அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத் தலைவர் ராபிஹ் நத்வி, துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹ்மான் குரைஷி, ஜமாஅத்தே இஸ்லாமி அகில இந்திய அமீர் ஜலாலுதீன் உமரி, தாருல் உலூம் முதல்வர் ஸலீம் காஸி, அகில இந்திய மில்லி கவுன்ஸில் பொதுச் செயலாளர் டாக்டர் மன்ஸூர் ஆலம் போன்றோரின் முயற்சியில் இந்தச் சட்ட உதவி குழு உருவாக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தீவிரவாதத்தின் பெயரில் முஸ்லிம் இளைஞர் சமுதாயம் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டு வரும் தற்போதையச் சூழலில் இது போன்றச் சட்ட உதவி குழுக்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட வேண்டியது சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மிக அத்தியாவசியமானதாகும். அதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் சமுதாய நல அமைப்புகளும் இது போன்ற ஒரு சட்ட உதவி குழு அமைக்க ஒருங்கிணைந்துத் தீர்மானத்திற்கு வர வேண்டும் எனத் தமிழ் முஸ்லிம் சமுதாயம் எதிர்பார்க்கின்றது.

Friday, February 29, 2008

கடையநல்லூரரில் முஸ்லிம்கள் மீது போலீசார் அராஜகமான முறையில் தடி அடி நடத்தி தாக்குதல் நடத்தியதை ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது!

கடையநல்லூரரில் முஸ்லிம்கள் மீது போலீசார் அராஜகமான முறையில் தடி அடி நடத்தி தாக்குதல் நடத்தியதை ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது. சம்மந்தப்பட்ட போலீசார் மீது உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கின்றது.

Thursday, February 28, 2008

குர்ஆனில் கருவளர்ச்சி! -1-

கருவளர்ச்சியில் காணப்படும் படிநிலைகளில் கரு எவ்வாறு படிப்படியாக வளர்ச்சியடைந்து மனித உருவைப் பெறுகிறது என்பதற்கு குர்ஆனில் ஆதாரமில்லை என முன்வைக்கப்படும் வாதத்தையும். விலங்கிலிருந்து மனிதன் தொன்றினான் என்ற கருவியல் சான்றிதழையும் குர்அன் முற்றாகமறுத்து நாத்திக வாதத்திற்கு சாவு மணி அடிக்கிறது அல்குர்ஆன்.
நாத்திகச் சிந்தனையில் வெளிப்படும் ஐயத்தைப் போக்கி விலங்கிலிருந்து மனிதன் தோன்றவில்லை எனும் தன்னுடைய கூற்றை நிறுவிக் காட்ட கருவியல் குறித்த தன்னுடைய ஆழ்ந்த ஞானத்தை கீழ்க்காணும் வசனங்களில் ஓங்கி ஒலிக்கிறது திருமறைக் குர்ஆன்!.
அருள்மறை குர்ஆன் கூறுகிறது:
'பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம், பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டம் ஆக்கினோம், பின்னர் அத்தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம், பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம், பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன:; (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.'(அத்தியாயம் 23 ஸுரத்துல் முஃமினூன் - 12 முதல் 14 வரையிலான வசனங்கள்.)
கருவியலில் காணப்படும் படிநிலைகள் என்னவென்றும், அந்தப் படிநிலைகளில் கரு எவ்வாறு வளர்ச்சியடைகிறது என்றும் திருமறைக்குத் தெரியவில்லை என்பதால் அதன் கூற்றைப் பொருட்படுத்த வேண்டிய தில்லை என இதற்கு மேலும் யாரேனும் எண்ணம் கொள்ளலாமா? அப்படி யாரேனும் எண்ணிக் கொண்டால் அவர்களைப் பகுத்தறிவாளர்கள் என்று நம்மால்தான் ஏற்க இயலுமா? என்ன கூறுகிறது இந்த வசனங்கள்?.
நூற்றுக் கணக்காண வருடங்கள் பற்பல விஞ்ஞானிகளின் இடைவிடாத உழைப்பால் ஆய்வுக் கூடங்களில் கருவுற்று நுண்ணோக்கியால் பிரசவம் பார்த்து நவீனஅறிவியல் உலகால் மட்டுமே ஈன்றெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அதிநவீன கருவியல் கண்டுபிடிப்பையல்லவா இம்மாமறைக் குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலேயே கூறி நிற்கிறது! இதற்கீடாகவா மற்றொரு அற்புதம் இப்பேரண்டத்தில் காணப்போகிறது. (வரும்....)