Tuesday, April 1, 2008

இராக்கியர்கள் பலியாக்கப்பட்டது போதும் - போப்

போப் பெனெடிக்ட் XVI அவர்கள் இராக்கின் அமைதிக்காக உரத்தக் குரலெழுப்பியுள்ளார். தமது மிகவும் கடுமையான முறையிலான கோரிக்கையைக் கடந்த (16.03.2008) ஞாயிற்று கிழமையன்று அவர் வெளியிட்டார். கடத்தப் பட்ட சால்டியன் கத்தோலிக் ஆர்ச் பிஷப்பின் உடல் மோசூல் நகரத்தின் வடபகுதியில் கண்டெடுக்கப்பட்ட பின்னர் அவர் இக்கோரிக்கையை வெளியிட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இராக்கில் தொடரும் இடைவிடாப் போரினால் இராக்கியர்கள் சமூக வாழ்க்கை முழுதும் சீர்குலைந்து விட்டதாக அதில் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
''பலிகள் போதும்; வன்முறைகள் போதும்; இராக்கில் நிலவும் வெறுப்புணர்வுகள் போதும்" என்று பெனெடிக்ட் அவர்கள் ஸெயின்ட் பீட்டர் ஸ்குவெரில் ஞாயிறு அன்று நடந்த தமது திருச்சபையின் உரையின் இறுதியில் மக்களின் கைத்தட்டல் ஆதரவு முழக்கத்துக்கிடையில் கூறினார்.
போப் அவர்கள் ஆழமான உணர்ச்சிகளுடன் இந்த உளப்பூர்வமான கோரிக்கையை விடுத்து, ''இராக்கில் படுகொலைகளையும் வன்முறைகளையும் வெறுப்புணர்வுகளையும் நிறுத்துங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.
''அதே நேரத்தில் நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தப் போரினால் ஏற்பட்ட தனிப்பெரும் இழப்புகளும் சமூக வாழ்வில் ஏற்பட்ட சீர்குலைவையும் பாதிப்புகளையும் தாங்கி வரும் இராக்கிய மக்களிடமும் ஒரு கோரிக்கை விடுக்கிறேன்: "இராக்கில் உள்ள எல்லா மத-இனக் குழுக்களும் பழங்குடிக் குழுவினரும் ஒன்றிணைந்து, தங்களுக்கிடையே மன்னிப்பு, நீதி, பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல் போன்ற சுமுகநிலையை உருவாக்கித் தலை நிமிர்ந்து வாழ்வதற்கானத் தங்கள் வாழ்க்கை முறையை ஆராய்ந்து சீரமைத்துக் கொள்ள முன்வர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் அமெரிக்கத் தலைமையிலான இராக் மீதான ஆக்கிரமிப்புக்குக் கடுமையாக எதிர்ப்பும் தெரிவித்தார்.
போப்பின் இந்தக் கோரிக்கை, சர்சுடைய புனித வாரப் பண்டிகைக் கொண்டாட்டம் துவங்கும் ஞாயிறு அன்று நடந்த திருச்சபையின் குருத்தோலைக் கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரையின் இறுதியில் முன்வைக்கப் பட்டது.
கடந்த வியாழன் (13.3.2008) அன்று ஆர்ஷ் பிஷப் பாவ்லொஸ் ஃபராஜ் ராஹோ அவர்களுடைய உடல் மோசூலுக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது. அவர் 29.2.2008 அன்று கடத்தப் பட்டிருந்தார். ராஹோவின் கொலையை, "மனிதாபிமானமற்ற வன்முறைச்செயல்'' என்றும் "இது மனித நேயத்தின் அந்தஸ்தையே தாக்கியுள்ளது" என்றும் பெனெடிக்ட் அவர்கள் குறிப்பிட்டார். கொலை செய்யப்பட்ட ஆர்ச் பிஷப் ராஹோவின் ஏசு கிருஸ்து மீதுள்ள நம்பிக்கையைப் பெரிதும் புகழ்ந்து, "அவர் தமக்கு பல பயமுறுத்தல்கள் கஷ்டங்கள் ஏற்பட்ட போதும் தமது ஜெபக்கூட்டத்தை கைவிடாமல் தமது பணியைத் தொடர்ந்தார்" என்று ஞாயிறுக் கூட்டத்தில் பெனெடிக்ட் கூறினார். கத்தோலிக்க சர்ச்சின் புனித வாரத்தின் துவக்க விழாவில் ராஹோவின் இந்த மரணத்தை அவர் நினைவு கூர்ந்தார். இந்த வாரத்தை (கிருத்துவ) நம்பிக்கையாளர்கள் புனித வாரமாகவும் ஏசு கிருஸ்து அவர்கள் பெற்ற துன்பத்தையும் மரணத்தினையும் நினைவு கூர்வர். பெனெடிக்ட் மேலும் கூறியதாவது: ராஹோவின் கத்தோலிக்க சர்ச்சுக்கான அர்ப்பணிப்பு மனப்பான்மையும் அவரது மரணமும் இந்தக் கடுமையான வேதனைக்குரலை எழுப்பிடவும் இராக்கில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே வாரம் துவங்கி நிகழ்ந்து வரும் வன்முறைகளை வன்மையாகக் கண்டிக்க வேண்டிய நிலைக்குத் தம்மைத் தள்ளியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதனூடே போப் பெனெடிக்ட் அவ்வப்போது இராக்கிய கிருத்துவச் சமுதாயத்தினர்கள் மீது தீவிரவாதிகளின் தாக்குதல்களையும் விமர்சித்து இருக்கிறார். சென்ற ஆண்டு அவர் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷிடம் இராக்கிய கிருத்துவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Friday, March 28, 2008

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள் conte….5

23. யா அல்லாஹ்! எங்களின் பாவங்களை நீ மன்னிக்காமல் விட்டுவிடாதே! குறைகளை மறைக்காமல் விட்டுவிடாதே! கவலையைப் போக்காமல் விட்டுவிடாதே! கடனை அடைக்காமல் விட்டுவிடாதே! அருளாளர்களுக்கெல்லாம் அருளாளனே! உலக மற்றும் மறுமையின் தேவைகளில் அதில் உனக்கு பொருத்தமும் எங்களுக்கு வெற்றியுமுள்ள எத்தேவைகளையும் எங்களுக்கு நிறைவேற்றாமல் விட்டுவிடாதே!
24. யா அல்லாஹ்! உன்னிடமிருந்து அருளை நிச்சயமாக நான் கேட்கின்றேன். அதனைக் கொண்டே என் உள்ளத்திற்கு நீ நேர்வழி காட்டுகின்றாய். என் காரியங்கள் அனைத்தையும் அதனைக் கொண்டே நீ ஒன்று சேர்க்கின்றாய். என்னுடைய பிரிவினையை அதைக் கொண்டே நீ சீர்படுத்துகின்றாய். என்னுடைய மறைவான விஷயங்களை அதைக்கொண்டே நீ பாதுகாக்கின்றாய். என்னுடைய வெளிப்படையானவைகளையும் அதைக் கொண்டே நீ உயர்த்துகின்றாய் அதைக் கொண்டே என்னுடைய அமல்களையும் நீ தூய்மையாக்குகின்றாய். அதைக் கொண்டே எனக்கு நேர்வழியையும் நீ காட்டுகின்றாய். அதைக் கொண்டே குழப்பங்களை என்னைவிட்டும் நீ அகற்றுகின்றாய். அதைக் கொண்டே எல்லாக் கெடுதிகளிலிருந்தும் நீ என்னைப் பாதுகாப்பாயே அப்படிப்பட்ட அருளை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.
25. யா அல்லாஹ்! தீர்ப்பு நாளில் வெற்றியையும் நற்பாக்கியம் உள்ளவர்களின் வாழ்க்கையையும் ஷுஹதாக்களின் அந்தஸ்தையும் நபிமார்களுடன் இருப்பதையும் எதிரிகளுக்கு எதிராக எனக்கு உதவி கிடைப்பதையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.
26. யா அல்லாஹ்! ஈமானில் உறுதியையும் நல்லொழுக்கத்தில் உறுதியையும் வெற்றியைப் பின் தொடரும் லாபத்தையும் உன்னிடமிருந்து அருளையும் நற்பாக்கியங்களையும் பிழை பொறுப்பையும் திருப்பொருத்தத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.
27. யா அல்லாஹ்! ஆரோக்கியத்தையும் பத்தினித் தனத்தையும் நல்லொழுக்கத்தையும் விதியை ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். யா அல்லாஹ்! என் ஆத்மாவின் கெடுதியிலிருந்தும் இன்னும் உன் ஆதிக்கத்திலுள்ள ஒவ்வொரு மிருகத்தின் கெடுதியிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். நிச்சயமாக என் இறைவன் நேரான வழியில் இருக்கின்றான்.
28. யா அல்லாஹ்! என் பேச்சை நீ கேட்கின்றாய். என் நிலையினை நீ பார்க்கின்றாய். என் இரகசியத்தையும் பரம ரகசியத்தையும் நீ அறிந்திருக்கின்றாய். என் காரியத்தில் எதுவும் உன்னிடம் மறைந்ததாக இல்லை! நான் ஒன்றுமில்லாத ஏழை! இரட்சிப்புத் தேடுபவன்! அபயம் தேடுபவன்! இரக்கத் தன்மையுள்ள, இளகிய உள்ளமுள்ள, செய்த பாவங்களை மனப்பூர்வமாய் ஏற்றுக் கொள்பவன், மிஸ்கீனின் (ஏழையின்) வேண்டுகோளாக உன்னிடம் வேண்டுகிறேன். பணிந்த நிலையில் மண்டிடும் பாவியின் மன்றாடுதலாக மன்றாடுகின்றேன். உள்ளம் பயந்த நிலையில் பிரார்த்திப்பவரின் பிரார்த்தனையாக நான் உன்னிடம் பிரார்த்திக்கின்றேன். பிடரியைப் பணியவைத்து, உடம்பையும் பணியவைத்து, மூக்கையும் (முகத்தையும்) மண்ணில் படியவைத்து பயந்த நிலையில் பிரார்த்திப்பவனின் பிரார்த்தனையாக நான் உன்னிடம் பிரார்த்திக்கின்றேன்.
நம் தலைவர் முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும், அன்னாரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் அருளும் கருணையும் உண்டாகட்டுமாக! - ஆமீன்

Thursday, March 27, 2008

குஜராத் கலவரம் குறித்து சிறப்புப் புலனாய்வுக்கு உச்சநீதிமன்றம் ஆணை!

வியாழன், 27 மார்ச் 2008
புதுதில்லி: கடந்த 2002ல் நரேந்திரமோடி காவிப்படையினரை ஏவி விட்டு முஸ்லிம்களைத் திட்டமிட்டுக் கருவறுத்தது தெரிந்ததே. இந்த மாபாதகக் கொலைகளைச் செய்த கொலையாளிகளே நரேந்திர மோடிதான் இதற்குக் காரணம் என்று தெளிவாக ஒப்புக் கொண்டிருந்த போதும் இது குறித்து இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இப்போது குஜராத் கலவரம் பற்றி மறு விசாரணை நடத்த புதிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தியுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
குஜராத்தைச் சேர்ந்த மூத்த இந்தியக் காவல் பணி (IPS) அதிகாரிகள் கீதா ஜோஹ்ரி, சிவானந்த் ஜா, ஆஷிஷ் பாட்டியா, CBI முன்னாள் இயக்குநர் R.K. ராகவன், ஓய்வு பெற்ற காவல் இயக்குநர் C.P. சத்பதி ஆகியோர் இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இடம் பெறுவர். அவர்கள் விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மனித நேய ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். இது குறித்து முனைப்புடன் போராடி வரும் பிரபல மனித உரிமை ஆர்வலர் தீஸ்டா சற்றல்வாட், "கால தாமதமானாலும் உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கதாகும். குஜராத் காவல் துறை காவிகளின் கூலிப்படையைப் போல செயல்படுவதினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை கானல் நீராக இருந்து வந்த நீதி இப்போது கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது" என்று கூறினார்.

குஜராத் கலவரம் தொடர்பாக நான்காயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் பதியப்பட்டாலும் போதிய ஆதாரம் இல்லை என ஈராயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை குஜராத் காவல்துறை தவிர்த்துவிட்டது எனவும், சாட்சிகளை மிரட்டி வருவதாகவும் அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, சாட்சிகள் பலர் அரசுக்கு எதிராக சாட்சி அளித்தாலும் பின்னர் வழக்கிலிருந்து பின்வாங்கினர். அவர்கள் மிரட்டப்பட்டதால் இவ்வாறு தடம் பிறழ்ந்ததாகத் தெரியவந்தது. இதையடுத்து இந்த விசாரணையை குஜராத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும், CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தேசிய மனித உரிமை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதையடுத்தே சிறப்புப் புலன் விசாரணைக் குழுவை ஏற்படுத்தும் முடிவை நீதிபதிகள் அறிவித்தனர். உச்ச நீதிமன்றத்தின் இவ்வறிவிப்பு காவிக்கட்சியினரிடம் கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், முஸ்லிம்களிடையே அவ்வளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள் conte….4

18. யா அல்லாஹ்! என் பார்வையிலும், என் கேள்விப்புலனிலும், என் உடலமைப்பிலும், என் குணத்திலும், என் குடும்பத்திலும், என் உயிர்வாழ்விலும், என்னுடைய அமல்களிலும் நீ அருள்புரியும்படி நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். என்னுடைய நற்காரியங்களை நீ ஏற்றுக் கொள்வாயாக! சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்த்துக்களை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.
19. யா அல்லாஹ்! கஷ்டங்கள் ஆட்கொள்வதை விட்டும், விரும்பத்தகாதவை ஏற்படுவதை விட்டும் தீய முடிவுகளை விட்டும் விரோதிகளின் கேலி கிண்டல்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். உள்ளங்களை புரட்டக்கூடிய அல்லாஹ்வே! உன் மார்க்கத்தின் மீது என் உள்ளத்தை உறுதிப்படுத்துவாயாக! உள்ளங்களை திருப்பக்கூடிய அல்லாஹ்வே! உனக்கு வழிபடுவதின் மீது என் உள்ளத்தை திருப்பி விடுவாயாக!.
20. யா அல்லாஹ்! (உன் அருட்கொடைகளை) எங்களுக்கு அதிகப்படுத்துவாயாக! எங்களுக்குக் குறைத்துவிடாதே! எங்களை கண்ணியப்படுத்துவாயாக! இழிவு படுத்திவிடாதோ! (உனது அருட்கொடைகளை) எங்களுக்குத் தந்தருள்வாயாக! உன் அருளிலிருந்து எங்களை நிராசையற்றவர்களாக ஆக்கிவிடாதே! யா அல்லாஹ்! எங்களின் எல்லாக் காரியங்களின் முடிவையும் நன்மையாக ஆக்கி வைப்பாயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் எங்களைப் பாதுகாப்பாயாக!
21. யா அல்லாஹ்! உனக்கு மாறு செய்வதை விட்டும் எங்களை தடுக்கக்கூடிய (உன்னைப்பற்றிய) அச்சத்தையும், உன்னுடைய சுவர்க்கத்தைப் பெற்றுத் தரும் வழிபாட்டையும், உலகச் சோதனைகளை எளிதாகக் கருதச் செய்யும் உறுதியையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! எங்களுடைய செவிப்புலன்களையும், பார்வைகளையும் (உடல்) சக்திகளையும் நீ எங்களை வாழ வைக்கும் காலமெல்லாம் (குறைவின்றி) இயங்கச் செய்வாயாக! அதனை எங்கள் வாரிசுகளுக்கும் (சந்ததிகளுக்கும்) ஆக்குவாயாக! எங்களுக்கு அநீதம் செய்தவர்களைப் பழி வாங்குவாயாக! எங்கள்மீது விரோதம் கொண்டவர்களுக்குப் பாதகமாக எங்களுக்கு நீ உதவி செய்வாயாக! இவ்வுலகையே எங்கள் நோக்கமாகவும் எங்கள் அறிவின் எல்லையாகவும் ஆக்கிவிடாதே! எங்களுடைய மார்க்த்தில் எங்களுக்கு சோதனைகளை ஏற்படுத்திவிடாதே! எங்களின் பாவங்களினால் எங்கள்மீது இரக்கம் காட்டாத, உன்னை பயப்படாதவனை எங்கள் மீது பொறுப்பாளியாக ஆக்கிவிடாதே!
22. யா அல்லாஹ்! உனது அருளைப் பெற்றுத்தரும் செயல்களையும், உனது மன்னிப்பில் உறுதி கொள்ளும் நிலையையும் அனைத்து நல்லறங்களின் பிரதிபலன்களையும் அனைத்து பாவங்களைவிட்டும் பாதுகாப்பையும் சுவர்க்கத்தைப் பெற்று வெற்றி பெற, நரகை விட்டும் ஈடேற்றம் பெற (அருள் புரியுமாறும்) நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.

Wednesday, March 26, 2008

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள் conte….3

12. யா அல்லாஹ்! உன்னை அதிகம் ஞாபகம் செய்யக்கூடியவராகவும், உனக்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடியவராகவும், உனக்கு அதிகம் வழிபடுபவராகவும், கட்டுப்படுபவராகவும், அடிபணிபவராகவும் என்னை ஆக்கியருள்வா யாக! என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! என் பாவத்தைப் போக்கி விடுவாயாக! என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! எனக்குரிய ஆதாரத்தை உறுதிப்படுத்துவாயாக! என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! என் நாவை பலப்படுத்துவாயாக! என் உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடுவாயாக!.
13. யா அல்லாஹ்! (சகல) காரியங்களிலும் நிலைத்திருப்பதையும், நேர்வழியில் உறுதியையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். இன்னும் உன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்திடவும் உன்னை அழகிய முறையில் வணங்கிடவும் நான் உன்னிடம் கேட்கின்றேன். தூய்மையான உள்ளத்தையும் உண்மை உரைக்கும் நாவையும் நான் உன்னிடம் கேட்கிறேன். உனக்குத் தெரிந்த நலவுகளைக் கேட்கின்றேன். உனக்குத் தெரிந்த (எல்லாப்) பாவங்களிலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகின்றேன். நீயே மறைவானவற்றை யெல்லாம் மிகவும் நன்கறிந்தவன்!
14. யா அல்லாஹ்! எனக்கு நேர்வழியைக் காட்டுவாயாக! என் ஆத்மாவின் கெடுதிகளிலிருந்து என்னைக் காத்தருள்வாயாக! நற்காரியங்களைச் செய்யவும் வெறுக்கத்தக்க காரியங்களை விட்டு ஏழைகளை நேசிக்கும் தன்மையையும் தந்து என் பாவங்களை மன்னித்து எனக்கு அருள்புரியும்படி நான் உன்னிடம் கேட்கின்றேன். உன் அடியார்களை குழப்பத்தில் ஆழ்த்த நீ விரும்பினால், குழப்பத்தில் ஆழ்த்தப்படாத நிலையிலேயே என்னை உன்னளவில் மரணிக்கச் செய்து விடுவாயாக!
15. யா அல்லாஹ்! உன்னுடைய நேசத்தையும் உன்னை நேசிப்பவர்களின் நேசத்தையும் உன் நேசத்தின் பக்கம் என்னைச் சமீபமாக்கி வைக்கக்கூடிய எல்லா அமல்களின் நேசத்தைபும் நான் உன்னிடம் கேட்கின்றேன். யா அல்லாஹ்! சிறந்த கேள்வியையும் சிறந்த பிரார்த்தனையையும் சிறந்த வெற்றியையும் சிறந்த நன்மையையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். என்னை நீ உறுதிப்படுத்துவாயாக! என்னுடைய தரா சு-வை (நன்மையால்) அதிக எடையுள்ளதாக ஆக்கியருள்வாயாக! என்னுடைய ஈமானை (நம்பிக்கையை) உறுதிப்படுத்துவாயாக! என் அந்தஸ்த்தை உயர்த்துவாயாக! என்னுடைய தொழுகையையும் இன்னும் (ஏனைய) வணக்கங்களையும் ஏற்றுக் கொள்வாயாக! என் பாவங்களை மன்னித்தருள்வாயாக! சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்த்துக்களை நான் உன்னிடம் கேட்கின்றேன்.
16. நன்மைகளின் ஆரம்பங்களையும் முடிவுகளையும் இன்னும் எல்லா நன்மைகளையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். நன்மைகளின் ஆரம்ப, முடிவு, அதன் வெளிப்படை, அந்தரங்கம் மற்றும் சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்த்துக்களை நான் உன்னிடம் கேட்கின்றேன்.
17. யா அல்லாஹ்! என்னுடைய அந்தஸ்தை உயர்த்துவதையும் என் பாவத்தை மன்னிப்பதையும் நீ என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதையும் என் அபத்தை (கற்பை) பத்தினித் தனமாக்குவதையும் நீ என்னுடைய பாவங்களை மன்னிப்பதையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன்.

Tuesday, March 25, 2008

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள் conte….2

6. யா அல்லாஹ்! என் உள்ளத்தில் இறையச்சத்தை ஏற்படுத்துவாயாக! அதனைத் தூய்மைப் படுத்துவாயாக! நீயே அதைத் தூய்மைப் படுத்துபவர்களில் மிகச் சிறந்தவன்! அதனுடைய பொறுப்பாளனும், தலைவனும் நீயே! பிரயோஜனம் இல்லாத அறிவு, பயப்படாத உள்ளம், திருப்தியடையாத மனம் மற்றும் ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
8. யா அல்லாஹ்! நான் செய்த மற்றும் செய்யாத கெட்ட செயல்களிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். யா அல்லாஹ்! உன் அருட்கொடைகள் (என்னைவிட்டு) நீங்குவதை விட்டும், நீ (எனக்கு) அளித்த ஆரோக்கியத்தன்மை (என்னை விட்டு) மாறுவதை விட்டும், உனது திடீர் தண்டனையை விட்டும், உன்னுடைய சகல கோபங்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
9. யா அல்லாஹ்! இடிந்து விழுந்தோ, உயரத்திலிருந்து கீழே விழுந்தோ, மூழ்கியோ, எரிந்தோ இறப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். மரண நேரத்தில் ஷைத்தான் என்னைத் தீண்டுவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (விஷ ஜந்துக்களால்) கொட்டப்பட்டு இறப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். உள்ளத்தில் முத்திரையிடப்படும் அளவுக்கு பேராசை ஏற்படுவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
10. யா அல்லாஹ்! கெட்ட நோய்கள், கெட்ட ஆசைகள், கெட்ட செயல்கள் இன்னும் வெறுக்கத்தக்க குணங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். இன்னும் கடன்கள் அதிகரிப்பதிலிருந்தும், மனிதர்களின் ஆதிக்கத்திலிருந்தும், விரோதிகளின் கேலி கிண்டல்களிலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
11. யா அல்லாஹ்! என்னுடைய மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக! (ஏனெனில்) அதுதான் எனது அரண். எனது உலகை எனக்கு சீர்படுத்துவாயாக! (ஏனெனில்) அதுதான் நான் வாழுமிடம். எனது மறுமையை சீர்படுத்துவாயாக! (ஏனெனில்) அதுதான் நான் திரும்பிச் செல்லுமிடம். எனது வாழ்க்கையில் அதிக நன்மைகள் புரிவதற்கு வாய்ப்பளிப்பாயாக! அனைத்து தீமைகளை விட்டும் விடுபட்டதாக எனது மரணத்தை ஆக்குவாயாக! யா அல்லாஹ்! எனக்கு நீ உதவியாக இருப்பாயாக! எனக்கு எதிராக இருக்காதே! எனக்கு நீ உதவி செய்வாயாக! எனக்கு எதிராக உதவி செய்யாதே! எனக்கு நேர்வழி காட்டுவாயாக! நேர்வழி பெறும் வழியை எனக்கு இலகுபடுத்துவாயாக!.

Monday, March 24, 2008

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள்!

1. யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும் எனது உலக வாழ்விலும் எனது குடும்பத்திலும் எனது செல்வத்திலும் மன்னிப்பையும் நலனையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். யா அல்லாஹ்! என்னுடைய குறைகளை மறைப்பாயாக! யா அல்லாஹ்! என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத் தருவாயாக! யா அல்லாஹ்! எனக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலதுபுறமிருந்தும் இடதுபுறமிருந்தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக! எனக்கு கீழ்புறத்திலிருந்து நான் எதிர்பாராத விதமாகக் கொல்லப்படுவதை உன் வல்லமையைக் கொண்டு நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.
2. யா அல்லாஹ்! எனது உடலில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! எனது செவிப்புலனில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! எனது பார்வையில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வாகிய உன்னைத் தவிர (வேறு) யாருமே இல்லை. இறைநிராகரிப்பை விட்டும் வறுமையை விட்டும் மண்ணறையின் வேதனையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர (வேறு) யாருமில்லை. யா அல்லாஹ்! நீயே என் இரட்சகன்! உன்னைத்தவிர வணங்குவதற்குரியவன் வேறு யாருமில்லை. நீயே என்னைப் படைத்தாய் நான் உன்னுடைய அடிமை நான் என்னால் முடிந்த அளவுக்கு உனது உடன்படிக்கை மற்றும் வாக்குறுதியின் மீது நிலைத்திருக்கிறேன்.
நான் செய்த சகல தீமையைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். நீ எனக்களித்த அருட்கொடைகளைக் கொண்டு உன்பக்கமே நான் மீளுகிறேன். இன்னும் என்னுடைய பாவங்களை (மனமாற) ஒப்புக் கொள்கிறேன். எனவே என்னை நீ மன்னித்தருள்வாயாக! உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. யா அல்லாஹ்! கவலையிலிருந்து (துயரத்திலிருந்து) நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். இன்னும் இயலாமை மற்றும் சோம்பேறித்தனத்திலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகின்றேன்.
இன்னும் கடன் அதிகரிப்பதிலிருந்தும் மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகின்றேன். யா அல்லாஹ்! இந்த நாளின் ஆரம்பத்தைச் சீர்திருத்தம் உள்ளதாகவும் அதன் நடுவை வெற்றியுள்ளதாகவும் அதன் கடைசியை லாபம் உள்ளதாகவும் ஆக்கியருள்வாயாக! அருளாளர்களுக்கெல்லாம் அருளாளனே! ஈருலக நலவையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.
3. விதியை பொருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் மரணத்திற்குப் பின் குளிர்ந்த (சுவர்க்க) வாழ்வையும், வழிகேட்டின் குழப்பத்திலும் தீய விளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டுவிடாது உன்னைச் சந்திப்பதின் ஆசையையும் உன் திருமுகத்தைப் பார்ப்பதில் அடையும் இன்பத்தையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன்.
நான் யாருக்கும் அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது யாராவது எனக்கு அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது நான் அத்துமீறுவதிலிருந்தும் அல்லது யாராவது என்மீது அத்துமீறுவதிலிருந்தும் அல்லது நீ மன்னிக்காத தவறு மற்றும் பாவங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
4. மிக நீளமான வயது வரை உயிர் வாழ்வதிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். நல்ல அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் எனக்கு நீ நேர்வழி காட்டுவாயாக! அந்த நல் அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் உன்னைத் தவிர வேறு யாரும் நேர்வழி காட்டமுடியாது! கெட்ட செயல்கள் மற்றும் கெட்ட குணங்களிலிருந்தும் என்னைத் திருப்பிவிடுவாயாக! அப்படிப்பட்ட கெட்ட அமல்கள் மற்றும் கெட்ட குணங்களிலிருந்து உன்னைத்தவிர யாரும் என்னைத்திருப்ப முடியாது! 5. யா அல்லாஹ்! என் மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக! என் வீட்டை எனக்கு நீ விஸ்தீரணப்படுத்துவாயாக! என் உணவில் நீ அருள்புரிவாயாக! கல் நெஞ்சம், பொடுபோக்கு மற்றும் ஏழ்மையிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன். இன்னும் இறைநிராகரிப்பு பாவச்செயல் பிரிவை ஏற்படுத்துதல் மற்றும் பிறர் பார்க்க வேண்டும் கேட்க வேண்டும் என்ற முகஸ்துதியிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். செவிடு, குருடு, உறுப்புக்கள் அழுகிவிடும் நோய் இன்னும் கெட்ட (எல்லா) நோய்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். cont....