Friday, March 28, 2008

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள் conte….5

23. யா அல்லாஹ்! எங்களின் பாவங்களை நீ மன்னிக்காமல் விட்டுவிடாதே! குறைகளை மறைக்காமல் விட்டுவிடாதே! கவலையைப் போக்காமல் விட்டுவிடாதே! கடனை அடைக்காமல் விட்டுவிடாதே! அருளாளர்களுக்கெல்லாம் அருளாளனே! உலக மற்றும் மறுமையின் தேவைகளில் அதில் உனக்கு பொருத்தமும் எங்களுக்கு வெற்றியுமுள்ள எத்தேவைகளையும் எங்களுக்கு நிறைவேற்றாமல் விட்டுவிடாதே!
24. யா அல்லாஹ்! உன்னிடமிருந்து அருளை நிச்சயமாக நான் கேட்கின்றேன். அதனைக் கொண்டே என் உள்ளத்திற்கு நீ நேர்வழி காட்டுகின்றாய். என் காரியங்கள் அனைத்தையும் அதனைக் கொண்டே நீ ஒன்று சேர்க்கின்றாய். என்னுடைய பிரிவினையை அதைக் கொண்டே நீ சீர்படுத்துகின்றாய். என்னுடைய மறைவான விஷயங்களை அதைக்கொண்டே நீ பாதுகாக்கின்றாய். என்னுடைய வெளிப்படையானவைகளையும் அதைக் கொண்டே நீ உயர்த்துகின்றாய் அதைக் கொண்டே என்னுடைய அமல்களையும் நீ தூய்மையாக்குகின்றாய். அதைக் கொண்டே எனக்கு நேர்வழியையும் நீ காட்டுகின்றாய். அதைக் கொண்டே குழப்பங்களை என்னைவிட்டும் நீ அகற்றுகின்றாய். அதைக் கொண்டே எல்லாக் கெடுதிகளிலிருந்தும் நீ என்னைப் பாதுகாப்பாயே அப்படிப்பட்ட அருளை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.
25. யா அல்லாஹ்! தீர்ப்பு நாளில் வெற்றியையும் நற்பாக்கியம் உள்ளவர்களின் வாழ்க்கையையும் ஷுஹதாக்களின் அந்தஸ்தையும் நபிமார்களுடன் இருப்பதையும் எதிரிகளுக்கு எதிராக எனக்கு உதவி கிடைப்பதையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.
26. யா அல்லாஹ்! ஈமானில் உறுதியையும் நல்லொழுக்கத்தில் உறுதியையும் வெற்றியைப் பின் தொடரும் லாபத்தையும் உன்னிடமிருந்து அருளையும் நற்பாக்கியங்களையும் பிழை பொறுப்பையும் திருப்பொருத்தத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.
27. யா அல்லாஹ்! ஆரோக்கியத்தையும் பத்தினித் தனத்தையும் நல்லொழுக்கத்தையும் விதியை ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். யா அல்லாஹ்! என் ஆத்மாவின் கெடுதியிலிருந்தும் இன்னும் உன் ஆதிக்கத்திலுள்ள ஒவ்வொரு மிருகத்தின் கெடுதியிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். நிச்சயமாக என் இறைவன் நேரான வழியில் இருக்கின்றான்.
28. யா அல்லாஹ்! என் பேச்சை நீ கேட்கின்றாய். என் நிலையினை நீ பார்க்கின்றாய். என் இரகசியத்தையும் பரம ரகசியத்தையும் நீ அறிந்திருக்கின்றாய். என் காரியத்தில் எதுவும் உன்னிடம் மறைந்ததாக இல்லை! நான் ஒன்றுமில்லாத ஏழை! இரட்சிப்புத் தேடுபவன்! அபயம் தேடுபவன்! இரக்கத் தன்மையுள்ள, இளகிய உள்ளமுள்ள, செய்த பாவங்களை மனப்பூர்வமாய் ஏற்றுக் கொள்பவன், மிஸ்கீனின் (ஏழையின்) வேண்டுகோளாக உன்னிடம் வேண்டுகிறேன். பணிந்த நிலையில் மண்டிடும் பாவியின் மன்றாடுதலாக மன்றாடுகின்றேன். உள்ளம் பயந்த நிலையில் பிரார்த்திப்பவரின் பிரார்த்தனையாக நான் உன்னிடம் பிரார்த்திக்கின்றேன். பிடரியைப் பணியவைத்து, உடம்பையும் பணியவைத்து, மூக்கையும் (முகத்தையும்) மண்ணில் படியவைத்து பயந்த நிலையில் பிரார்த்திப்பவனின் பிரார்த்தனையாக நான் உன்னிடம் பிரார்த்திக்கின்றேன்.
நம் தலைவர் முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும், அன்னாரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் அருளும் கருணையும் உண்டாகட்டுமாக! - ஆமீன்

No comments: