Tuesday, April 8, 2008

இந்திய விண்வெளி ஆய்வு மையம்! 75 முஸ்லிம் குடும்பங்களின் வேதனைக் குரல்கள்.நிலங்களைக் கொடுத்து குடிசைகளில் வாழும் நவாபுகள்!

நேரடி - கள ஆய்வுஅபூசாலிஹ்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையம் நம்நாட்டின் விஞ்ஞான எழுச்சிக்கும், வளர்ச்சியின் பெருமிதத் திற்கும் சிகரமாக விளங்குகிறது. இந்த விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து தான் அறுபது ஆண்டுகளாக எவ்வித ஒட்டோ உறவோ இல்லாத இஸ்ரேல் நாட்டு உளவு செயற்கைக்கோளைக் கூட ஏவிவிட்டோம்.ராக்கெட்களின் பேரிரைச்சலில் விண்வெளி ஆய்வு மையம் முழுமையாக அமைக்க வேண்டும் என்பதற்காக நிலங்களை பறிகொடுத்த 75 முஸ்லிம் குடும்பங்களின் வேதனைக் குரல்கள் வெளியே கேட்காமலேயே போய் விட்டது.1972 ஆம் ஆண்டு ஒநதஞ தங்களின் நிலங்களை கையகப்படுத்தி தங்களை நிர்க்கதியாக்கி விட்டதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.தங்கள் வீடுகளை இழந்து விட்டு ஆற்றைக் கடந்து (இன்று வரை சாலை வசதி இல்லை) சீறி எழும் வங்கக்கடலும் ஆறும் சேரும் பொழி முகத்திற்கு அருகில் ஏனென்று கேட்க யாருமற்ற நிலையில் தங்கள் குடிசைகளை அமைத்துக் கொண்டு வாழத் தொடங்கினார்கள். அல்லாடத் தொடங்கினார்கள்.கடலோரமாக வாழ்ந்து கொண்டிருப்பதால் மீன்பிடி தொழில் மூலம் தங்களின் வாழ்க்கை சக்கரத்தினை நகர்த்திக் கொண்டு போனார்கள். ''உங்களுக்கு வேலை வாய்ப்பினை தருவோம்'' என்று கூறிய அதிகாரிகளின் வாக்குறுதிகள் கடற்காற்றில் கரைந்து போயின. இவ்வாறாக அவர்கள் சிரமநிலையில் வாழ்ந்து வருகிறார்கள் என்று முற்றும் போட்டுவிட முடியாது.2004 டிசம்பர் 26 ஆம் தேதி இந்தியப் பெருங்கடல் பகுதியை சூறையாடிய சுனாமி என்ற ஆழிப்பேரலை இந்தப் பகுதி வாழ் மக்களின் வாழ் வாதரங்களை துவம்சம் செய்தது. படகுகள், வாகனங்கள் உள்பட அவர் களின் வாழ்வாதாரங்கள் அனைத்தும் சேதமுற்றன. சோதனை மேல் சோதனை யாக விடிவுகாணாத வேதனையில் உழன்றனர்.தமிழகம் மற்றும் புதுவையில் தங்களின் மீட்புப் பணிகளையும், நிவாரண உதவிகளையும் வழங்கிய வரலாறு படைத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினருக்கு சற்று தாமதமாகவே (சில மாதங்கள் கழித்து) இப்பகுதி மக்களின் அவல நிலை குறித்த செய்தி எட்டியது. உடனடியாக தமுமுக மாநில நிர்வாகிகள் அப்பகுதி முஸ்லிம்களின் வாழ்வுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளை போர்க் கால அடிப்படையில் வழங்க முடிவெடுத்தனர்.2005ஆம் ஆண்டு அப்பகுதிக்கு சென்ற மாநில நிர்வாகிகள் செ. ஹைதர் அலி, ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் அம்மக்களின் குறைகளைக் கேட்டறிந்து படகுகள், வலைகள், மீன்களை வெளி யிடங்களுக்கு கொண்டு சென்று வியாபாரம் செய்வதற்கு வசதியாக பஜாஜ் எம்80 ரக இரு சக்கர வாகனங்களையும் வழங்கினர்.இன்று அம்மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் அவர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதனை ஆய்வு செய்ய தமுமுக விரும்பியது. தமுமுக துணைப் பொதுச் செயலாளர் மௌலவி.ஜே.எஸ்.ரிஃபாயி, மாநிலச் செயலாளர் சகோ.அப்துஸ் ஸமது, மாநில துணைச் செயலாளர் சகோ.இஸ்மாயில், மாநில உலமா அணிச் செயலாளர் மௌலவி காரைக்கால் யூசுப் எஸ்பி, மற்றும் திருவள்ளூர் மாவட்ட கழக நிர்வாகிகளும் உடன் சென்றனர்.குறுக்கே ஓடும் நதியை படகு மூலம் கடந்தும் பின்னர் நடந்து சென்றும் அந்தப் பகுதியை அடைந்தனர்.தங்கள் வீடுகளையெல்லாம் வறுமையின் காரணத்தினால் குடிசைகளாகவே வைத்திருக்கும் அப்பகுதி மக்கள் பள்ளி வாசலை மட்டும் காங்கிரீட் கட்டடமாக்கியுள்ளனர்.ஊர் மக்கள் அனைவரும் மதிய நேரத் தொழுகைக்குப் பின் தமுமுக நிர்வாகிகள் ஆற்றிய உரையினை கவனமாக செவிமடுத்தனர். பின்னர் கலந்துரையாடல் நடைபெற்றது.சுனாமியால் சுருட்டப்பட்ட தங்களுக்கு தமுமுகவின் நிவாரண உதவிகளால் தங்களின் தொழில் தொய்வின்றி செல்வதாக மகிழ்ச்சி தெரிவித்தனர். அப்பகுதி வாழ் மக்களின் சார்பாக சகோதரர் மீராசா நன்றியினை தெரிவித் தார். அப்பகுதி மக்களுக்கு சரியான கல்விக்கூடம் அங்கு இல்லை.இருக்கும் ஒரு பள்ளிக் கூடமும் தெலுங்கு மீடியம் தான். அதனால் மக்களை மதரஸாவிற்கு அனுப்புகிறார்கள். உயர் கல்விக்கு எப்பாடுபட்டாவது முக்கியத்துவம் கொடுத்து வளரும் தலைமுறையினரை வார்த்தெடுக்க வேண்டும். அதற்கு தமுமுக ஒத்துழைப்பு வழங்கும் என மாநில நிர்வாகிகள் உறுதிஅளித்தனர்.சரி அந்த ஊரின் பெயர் என்ன தெரியுமா? நவாபுபேட்டை. ஆம்! அவர்கள் குடிசைகளில் வாழும் நவாபுகள்.ISRO என்றதும் அநேகருக்கு உயரே சீறிச் செல்லும் ராக்கெட் நினைவிற்கு வரும்.ஆனால் நமக்கோ அதற்கு தங்கள் நிலங்களை தியாகம் செய்துவிட்டு கடலோடு உழலும் நவாபு பேட்டை சகோதரர்களின் முகங்கள் தான் நினைவிற்கு வரும். நவாபுபேட்டை மக்களின் குறைகள் தீர்வது எப்போது?

No comments: