Tuesday, February 5, 2008

தென்காசி குண்டு வெடிப்பு - குமார் பாண்டியன் அண்ணன் உள்பட 3 பேர் கைது

தென்காசி: தென்காசி குண்டு வெடிப்பு சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட குமார் பாண்டியன் அண்ணன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெடிக்காத குண்டு, டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகம் மற்றும் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த லோடு ஆட்டோவில் கடந்த 24ம் தேதி இரவு அடுதடுத்து குண்டுகள் வெடித்தன. பஸ் நிலைய குண்டு வெடிப்பில் வெற்றிலை வியாபாரி உள்பட இருவர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக தென்காசியில் முன்பு படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியனின் அண்ணன் ரவிப்பாண்டியன் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து வெடிக்காத குண்டு, டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதுகுறித்து தென்மண்டல ஐ.ஜீ.சஞ்சீவ் குமார் டிஐஜி கண்ணப்பன், எஸ்பி ஸ்ரீதர் ஆகியோர் நேற்று மாலை தென்காசியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.அவர்கள் கூறுகையில், தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் கடந்த 24ம் தேதி குண்டு வெடித்தது. இது தொடர்பாக தென்காசி மலையான்தெருவை சேர்ந்த சமீபத்தில் கொலையுண்ட குமார்பாண்டியனின் அண்ணன் ரவிபாண்டியன், செண்பகவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சுடலையாண்டி மகன் குமார் என்ற கேடிசி குமார், செங்கோட்டை கிருஷண்ன் கோவில் தெருவை சேர்ந்த விஸ்வநாதன் மகன் நாராயண சர்மா ஆகிய 3 பேரை கைது செய்துள்ளோம்.அவர்களிடமிருந்து வெடிக்காத ஒரு குண்டு, சர்க்கியூட், டெட்டனேட்டர்கள் டைம் செட் செய்யும் கருவி, பேட்டரி ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவர்கள் தயாரித்த 3 குண்டுகள் தான் ஆர்எஸ்எஸ் அலுவலகம் மற்றும் பஸ் நிலையத்தில் வெடித்தன. இவை தவிர மேலும் 3 குண்டுகளை கைப்பற்ற வேண்டியது உள்ளது.பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்களை கைது செய்தோம். ரவிபாண்டியனிடம் விசாரித்தபோது தனது வீட்டில் 4 பேர் பலியான போதும் இந்துகளிடம் பெரிய அளவில் எழுச்சி ஏற்படவில்லை. இப்படி ஓரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தால் அவர்கள் ஒன்றாக சேர்வார்கள் என்ற நோக்கத்தில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்தியதாக தெரிவித்தார்.அவருக்கு சொந்தமான கேபிள் டிவி அறையில் வைத்து குண்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 14 குண்டுகளை தயாரித்து அவைகளை இரண்டு இரண்டாக சேர்த்து 7 குண்டுகளாக மாற்றி உள்ளனர். இந்த குண்டுகளால் விளையும் சேதம் மிகவும் குறைவாக இருக்கும்.கடந்த ஜூலை மாதத்திலிருந்தே குண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகுதான் 6 பேர் கொலை நடந்துள்ளது. இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணை முடிந்துள்ளது. இவர்கள் மூன்று பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பலர் கைதாவார்கள்.ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் வெடிகுண்டு வைப்பதற்கு முன்பாக பியூஸ் கேரியரை உருவி மின்தடையை ஏற்படுத்தியுள்ளனர். சுவிட்ச் ஆன் செய்த 20 அல்லது 30 செகண்டுக்குள் வெடிக்கும் வகையில் குண்டுகளை செட் செய்துள்ளனர். அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தி குண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வெடிகுண்டுகள் தமிழகத்தில் வேறு எங்கும் பயன்படுத்தப்படவில்லை.வீண் பதற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பது தான் இவர்களின் நோக்கம். தென்காசியில் 98 சதவீகித மக்கள் அமைதியை விரும்புகின்றனர். வெறும் 2 சதவீகிதத்தினர் மட்டுமே தங்களது சுயலாபத்திற்காக அமைதிக் கூடாது என்று நினைக்கின்றனர்.பொதுமக்கள் ஓத்துழைப்பு கொடுத்தால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கலாம் என்றார் அவர்.இந்து முன்னணியைச் சேர்ந்த குமார் பாண்டியனின் அண்ணனே ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசிய சம்பவம் தென்காசியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Source: THATS TAMIL
http://thatstamil.oneindia.in/news/2008/02/05/tn-3-including-kumar-pandian-brother-arrested.html

No comments: