Wednesday, February 6, 2008

தனியார்மயமாக்கப்படும் போர்கள்!

உலகமயமாக்கல் காலத்தில் மிக அதிகமாக தனியார் மயமாக்கப்படுவது வங்கிகளோ, நிறுவனங்களோ அல்ல, போர்கள்தாம். இதற்கு ஈராக் நல்ல உதாரணம். அங்குதானே இப்போதும் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஓர் அமெரிக்க ஆய்வை ஆதாரமாகக் கொண்டு ராய்டர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகார்வபூர்வ கணக்கின்படி ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சமாகும். இவர்களைத் தவிர அமெரிக்காவிலிருந்தம் வேறு பல நாடுகளிலிருந்தும் வந்த ஒரு இலட்சத்து முப்பதாயிரம் வீரர்களும் அங்கு உள்ளனர். அரசின் கணக்கில் இவர்கள் வீரர்கள் அல்லர். பல்வேறு நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்த, பயற்சி பெற்ற படையாளிகள். அதாவது கூலிப்படையினர்.
தற்போது நடைபெறுகின்ற போர்களைக் கட்டுப்படுத்துவது இத்தகைய கூலிப்படையினரின் கைகளின்தான் உள்ளது. இப்படிக் கூலிப்படையகளை அனுப்புகின்ற நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் களத்தில் உள்ளன. அந்த நிறுவனங்களின் பட்ஜெட் சில நாடுகளின் பட்ஜெட்களைவிட அதிகம். ஒரு கணக்கின்படி அவற்றின் பட்ஜெட் தொகை 200 பில்லியன் டாலரைத் தாண்டும். ஈராக்கில் பல கொடூரங்களுக்குத் தலைமை தாங்கியது பிளாக் வாட்டர் எனும் கூலிப்படையினரே.

கலாச்சார, இராணுவ ரீதியிலான இந்தப் புதுவகை ஆக்கிரமிப்பு முறை குறித்து குவைத்திலிருந்து வெளிவருகின்ற அல்முஜ்தமா வார இதழ் முகப்புக் கட்டுரை வெளியிட்டிருந்தது. இது குறித்து ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்களும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இது தொடர்பாக முஹம்மத் ஜமால் அரஃபா எழுதியுள்ள 'புதிய கூலிப்படைகளும் போர்களின் தனியார் மயமாக்களும்' (அல்முர்தஸிகத்துல் ஜூதத் வகஸ்கஸதுல் ஹூரூப்) எனும் அரபி நூலில் ஆங்கிலப் புத்தகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல விசயங்களை வெளிக்கொணர்ந்துள்ளார். இது ஒரு கூலிப்படையினரின் பிரச்னை மட்டுமல்ல என்கிறார் ஜமால் அரஃபா. கூலிப்படையின் மறைவில் சிலுவைப் போராளிகளின் பாரம்பர்யம் என உரிமை கொண்டாடுகின்ற 'மால்ட்டா போராளிகள்' போன்ற ஏராளமான தீவிரவாதக் குழுக்கள் முஸ்லிம் நாடுகளில் ஊடுருவியுள்ளன். தாஃபூரிலும் சோமாலியாவிலும் நடைபெறுகின்ற குழப்பங்களின் பிண்னணியில் இவர்கள் உள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

எதற்காக கூலிப்படை என்ற கேள்வியையும் நூலாசிரியர் எழுப்புகின்றார். ஈராக்கில் செய்தது போல், சொற்களால் வர்ணிக்க முடியாத கொடூரங்களைச் செய்யவே இந்தக் கூலிப் படையினர்! இப்படிச் செய்தால் அரசும் அதிகாரப்பூர்வ இராணுவமும் சட்டத்தின் பிடியிலிருந்து எளிதாகத் தப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ இராணுவ வீரர்களின் இறப்பு எண்ணிக்கையை மட்டுமே அரசு வெளியிடும். கூலிப்படையினர் எத்தனைப்பேர் இறந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பிரச்னையே அல்ல. இறந்த வீரர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிக்கவும் மக்களின் கோபத்தை ஓரளவுக்குக் குறைக்கவும் அரசுகளால் இயலுகின்றன.

கூலிப்படையினராக வருகின்றவர்கள் அமெரிக்காவின் குடிமக்களாக இருக்கமாட்டார்கள். கிரீக் கார்டு மட்டுமே பெற்றிருப்பர். அவர்களுக்கு என்ன ஆனாலும் யாருக்கு இழப்பு?
நன்றி: சமரசம் இதழ்

No comments: