Monday, March 3, 2008

முஸ்லிம் இளைஞர்களுக்காகச் சட்ட உதவிக் குழு உதயம்!

புதன், 27 பெப்ரவரி 2008
புதுதில்லி: தீவிரவாதத் தொடர்பு படுத்திக் கைது செய்து கொடுமைப்படுத்தப்படும் முஸ்லிம் இளைஞர்களுக்குச் சட்டரீதியாக உதவி செய்ய உத்தரபிரதேசத்தில் உள்ள பல்வேறு முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றிணைந்து களம் இறங்குகின்றன. நாடு முழுவதும் முஸ்லிம் இளைஞர்களைத் தீவிரவாதத்தின் பெயர் கூறி கைது செய்யப்படுவதும் தொடர்ந்து அதே காரணம் கூறி அவர்களுக்குச் சட்ட உதவிகள் கிடைப்பது தடை செய்யப்படுவதும் பரவலாக நடைபெற ஆரம்பித்துள்ளது.
இதனையடுத்து, உத்தரபிரதேச மாநிலத்தில் முஸ்லிம் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு செயல்பட்டு வரும் வழக்கறிஞர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தின் இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு இயக்கம் என்ற பொருள்படும் ஆதங்க்வாத் விரோதி ஆந்தோலன் (AVA) என்ற அமைப்பின் கீழ் அவ்வாறு சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படும் முஸ்லிம் இளைஞர்களுக்குச் சட்ட உதவி கிடைக்கும் வகையில் ஒரு சட்ட உதவிக் குழு உருவாக்கப்பட்டது."சந்தேகத்தின் பெயரில் கொடூரமாகக் கொடுமைபடுத்தப்படுபவர்களுக்கு சட்டரீதியாக நியாயம் கிடைக்க வழிவகை செய்வதே எங்கள் நோக்கம்" என உருவாக்கப்ப்பட்டச் சட்ட உதவி குழுவின் பொறுப்பாளர் சஃபர்பாய் ஜீலானி அறிவித்தார். ஃபைஸாபாத், வாரணாசி, லக்னோ போன்ற பகுதிகளிலுள்ள நீதிமன்ற வளாங்கங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பின்னர் தீவிர்வாதம் தொடர்பான வழக்குகளை எடுப்பதில்லை என வழக்கறிஞர் அமைப்புகள் (Bar Associations) தீர்மானம் செய்திருந்தன. இத்தகையச் சூழலில் முஸ்லிம் இளைஞர்களின் மீது தீவிரவாதத் தொடர்புக் குற்றச்சாட்டுகள் சுமத்தி வழக்குகளில் சிக்க வைக்கும் செயல் நாடுமுழுவதும் அதிகரித்ததைக் கணக்கில் எடுத்தே உத்தரபிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்யும் விதத்தில் சட்ட உதவிக்குழு அமைக்க முடிவு செய்தன."Bar Association வழக்கறிஞர் அமைப்புகளைப் பகைத்துக் கொள்ளாமல் அவர்களுடன் இணைந்தே சட்ட உதவி குழு செயல்பட முயற்சிகளை மேற்கொள்ளும்" என சட்ட உதவிகுழுவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இந்தச் சட்ட உதவிகுழு செயல்படும் அமைப்பான AVA-க்கு 12 நிர்வாக உறுப்பினர்கள் அடங்கிய ஓர் குழுவும் 35 செயல்பாட்டு உறுப்பினர்கள் அடங்கிய ஓர் குழுவும் செயல்படும். இதில் 6 உறுப்பினர்கள் பல்வேறு நீதிமன்றங்களில் உள்ள பிரபலமான வழக்கறிஞர்களாவர். அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத் தலைவர் ராபிஹ் நத்வி, துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹ்மான் குரைஷி, ஜமாஅத்தே இஸ்லாமி அகில இந்திய அமீர் ஜலாலுதீன் உமரி, தாருல் உலூம் முதல்வர் ஸலீம் காஸி, அகில இந்திய மில்லி கவுன்ஸில் பொதுச் செயலாளர் டாக்டர் மன்ஸூர் ஆலம் போன்றோரின் முயற்சியில் இந்தச் சட்ட உதவி குழு உருவாக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தீவிரவாதத்தின் பெயரில் முஸ்லிம் இளைஞர் சமுதாயம் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டு வரும் தற்போதையச் சூழலில் இது போன்றச் சட்ட உதவி குழுக்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட வேண்டியது சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மிக அத்தியாவசியமானதாகும். அதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் சமுதாய நல அமைப்புகளும் இது போன்ற ஒரு சட்ட உதவி குழு அமைக்க ஒருங்கிணைந்துத் தீர்மானத்திற்கு வர வேண்டும் எனத் தமிழ் முஸ்லிம் சமுதாயம் எதிர்பார்க்கின்றது.

No comments: