Saturday, January 26, 2008

சிந்தனை மடல்: சீரழிவின் பக்கம் செல்லாதீர்கள்!

இன்றைக்கு சின்னத்திரை என்றழைக்கப்படும் தொலைக்காட்சி சாதனம் இல்லாத வீடுகள் இல்லை என்றளவுக்கு அது எங்கும் நிறைந்துள்ளது. அதனை அடுத்த நிலையில் இன்றைக்கு வீடுகளில் கம்ப்யுட்டர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. கஃபேக்களுக்குச் சென்று இணையத் தளங்களைப் பார்த்து ரசித்து மகிழ்ந்த நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக விடை பெற ஆரம்பித்திருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில் கம்ப்யுட்டர் இல்லாத அதுவும் இணையத் தள இணைப்பு இல்லாத வீடுகள் இல்லை என்றளவுக்கு நிலைமை மாறி விடக் கூடிய சூழலில் இன்றைய இந்திய சமூகம் இருந்து கொண்டிருக்கின்ற நிலையில், அதனால் ஏற்படும் சாதகம் மற்றும் பாதகங்களை சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய அவசியம் முஸ்லிம் சமுதாயத்திற்கு இருக்கின்றது. தொலைக்காட்சியைப் பொறுத்தவரை.., தொடர்களில் இருந்து நம் முஸ்லிம் சமூக ஆண்களும், பெண்களும் விலகிச் செல்ல முடியாத அளவுக்கு கட்டிப் போடப்பட்டிருக்கும் நிலையில்.., இன்றைய இளைய தலைமுறைகளை வீட்டிற்குள்ளேயே கட்டிப் போட்டு விட இணையத் தள உபயோகம் மாறி விடும் காலம் தலைகாட்டிக் கொண்டிருக்கின்றது. ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க விளையும் எவரும் இந்த இரு சாதனங்களின் பயன்பாடுகளை ஒதுக்கித் தள்ளி விட முடியாது. ஆனாலும், அவற்றை பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தாத விடத்து, அதனால் ஏற்படும் தீமைகள் நிரந்தரமான அழிவுக்கு மனிதனை இட்டுச் சென்று விடும் என்பதில் சந்தேகம் இல்லை. இன்றைக்கு ஒலி ஒளி பரப்பப்படும் தொடர்களில் குறிப்பாக ஒரு சமுதாயத்தை மட்டுமே உன்னதமான சமுதாயமாக சித்தரித்துக் காட்டப்படுகின்றது. அந்த சமுதாயத்தைச் சுற்றியே கதைகள் பின்னப்படுகின்றன. சுpறிது காலமுன்; வெளிவந்த திரைப்படமான 'அந்நியன்' ல் 'மனு' வின் சாதிக்கொரு நீதி சரியானது தான்.., தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான் என்பதை விட அந்தத் தண்டனை ஒவ்வொரு சாதிக்கும் வித்தியாசப்பட வேண்டியது அவசியம் தான் என்று வலியுறுத்தப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இன்னும் அந்த சமூகத்தில் நிலவும் தோஷ பரிகாரங்கள்.., கணபதி ஹோமம், என்பனவற்றில் பலன்கள் உண்டு என்பதாக சித்தரித்துக் காட்டப்படுகின்றது. இதன் காரணமாக முஸ்லிம் சமூகத்தவர்களும் அந்த கதாபாத்திரங்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் போன்றதொரு பிரச்னைகளைச் சந்திக்கும் பொழுது, தாங்களும் ஏன் தோஷ பரிகாரங்கள் செய்யக் கூடாது.., கணபதி ஹோமம் செய்யக் கூடாது என்று இஸ்லாத்திற்கு முரணான காரியங்களில்.., எதனை அல்லாஹ் மன்னிக்க மாட்டானோ அத்தகைய இணைவைப்புகளில் இறங்கி விடுவதனைக் காண்கின்றோம். சமீபத்தில் சென்னையில் ஒரு முஸ்லிம் பெண்மணி தனது கணவனது உயிருக்கு ஆபத்து என்று கருதி தோஷ பரிகாரமாகவும்.., அதனை நீக்குவதற்கு ஒரு மந்திரவாதியிடம் 25 லட்சம் கொடுத்து ஏமாந்த நிகழ்வினை தமிழகம் சந்தித்தது நினைவிருக்கலாம். இன்னும் இன்றைய தொலைக்காட்சிகளில் கிறிஸ்தவப் பிரச்சாரங்கள் முன்னைக் காட்டிலும் கடுமையாக இருக்கின்றன. அதில் குருடர்கள் பார்க்க வைக்கப்படுவதாகவும், நோயாளிகள் பிணிகள் தீர்ந்து சுகமடைவதாகவும் காட்டப்படுகின்றது. இதனைப் பார்க்கும் நமது பலவீனமான ஆண்களும், பெண்களும் நாமும் ஏன் அந்த வழியில் நமது பிரச்னைகளைத் தீர்த்து விடக் கூடாது என்று களத்தில் இறங்கி விடுகின்றன. சமீபத்தில் ஒரு காது கேளாதவர்களை கேட்க வைக்கின்றேன் என்று கூறி ஒரு 'சித்தர்' - மருத்துவர் தொலைக் காட்சிகளில் விளம்பரம் செய்து வருகின்றார். அதில் ஒரு முஸ்லிம் வாலிபர் அந்த மருத்துவரிடம் சிகிச்சைக்காகச் செல்கின்றார். அந்த மருத்துவர் சொல்லித் தரும் மந்திரங்களை அந்த நோயாளியான முஸ்லிம் திருப்பிச் சொல்ல வேண்டும் என்பது அந்த சிகிச்சைகளில் ஒன்று. அந்த மருத்துவர் கூறும் மந்திரங்களில் இணைவைப்பின் சாயல்கள் இருக்கின்றன. இந்த சிகிச்சை முறைகள் ஒரு முஸ்லிமினுடைய இறைநம்பிக்கையில் பலவீனத்தை ஏற்படுத்துகின்றது என்பதை அந்த முஸ்லிமானவர் அறியவில்லை. இறைவனே வாழ்வையும் அதனைத் தொடர்ந்த மரணத்தையும் படைத்துள்ளான். அவனே நோய்களுக்கான சிகிச்சையையும், மருந்துகளையும் ஏற்படுத்தித் தந்துள்ளான். நோய்களுக்கான முறையான சிகிச்சைகளைச் செய்து கொள்ள வேண்டுமே தவிர இஸ்லாத்திற்கு முரணான வகையில் நோய்களுக்கான நிவாரணத்தைத் தேடுவது இறைநம்பிக்கையை இழக்க வைத்து விடும். பொய்களைப் பரப்புவது, கண்கட்டி வித்தைகளை நம்புவது, செய்வினை செய்வதும், அதனை எடுக்க முற்படுவதும், சூதாட்டம், குறி கேட்பது மற்றும் ஜோஸியம் பார்ப்பது என்ற அனைத்தும் இன்றைய தொலைக்காட்சிகள் வழியே ஒலி ஒளி பரப்பப்படுவதை நாம் பார்க்கின்றோம். இவற்றைப் பார்ப்பதும், அவற்றை உண்மை என்று நம்புவதும், அவர்களை கண்ணியப்படுத்துவதும் உங்களது இறைநம்பிக்கையில் ஊணத்தை ஏற்படுத்தி விட்டது என்பதை அறிந்து கொள்ளவேண்டும். இறைவன் மீதும் அவனது வல்லமையின் மீதும் அவை உங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்க. தொலைக்காட்சிகளில் காட்டப்படும் நிகழ்ச்சிகளில் மனிதர்கள் மனிதர்கள் மீது சத்தியம் செய்வார்கள். அதனைப் போன்று நாமும் முற்படுவோமானால் இறைவனுக்கு இணைவைத்த பாவத்தில் வீழ்ந்தவர்களாவோம் என்பதையும் நினைவில் கொள்க. மனிதர்கள் தங்களது சத்தியங்களை இறைவனது பெயரிலேயே செய்து கொள்ள வேண்டும்.நாடகங்களில் வரும் கதாபாத்திரங்கள் மனிதர்களின் வாழ்வில் ஏகப்பட்ட மாற்றங்களை விளைவிக்கின்றன. அவர்களின் கலாச்சாரங்களைக் காப்பியடிக்கும் பழக்கம் நம்மில் கொஞ்சம் கொஞ்சமாக படிய ஆரம்பிக்கின்றன. இத்தகைய மனநிலை மாற்றங்கள் நாளடைவில் இஸ்லாமிய கலாச்சாரங்களை தூக்கி எறியும் அல்லது வெறுக்கும் மனநிலையை உருவாக்கி விடும் என்பதிலும் கவனம் தேவை. கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் கதாநாயக மற்றும் கதாநாயகிகள் போன்று தாமும் ஏன் வாழக் கூடாது என்று அவர்களது பழக்க வழக்கங்களை காப்பி அடிக்கும் போக்கு இன்றைய இளைஞர்கள் மற்றும் இளைஞிகளிடம் காணப்படுவதை நாம் காண முடிகின்றது.சின்னத் திரைகள் மூலமாக குற்றங்களும், வன்முறைகளும், கொலைகளும், பெண்களை மானபங்கப்படுத்தும் காட்சிகளும், கற்பழிப்புக் காட்சிகளும் தாரளமாகக் காட்டப்படுகின்றன. இவை பார்ப்பவர்களின் மனங்களின் வக்கிர எண்ணங்களை உருவாக்குகின்றன. கூட்டாகச் சேர்ந்து குற்றங்களில் ஈடுபடுவது, ஏமாற்றுதல், மோசடி செய்வது, லஞ்சம் வாங்குவது இன்னும் இது போன்ற காட்சிகளும் மக்கள் மனதில் குற்றம் செய்யும் உணர்வுக்கு அடித்தளமிடுகின்றன.எல்லாம் வல்ல அல்லாஹ் இதுபோன்ற தீங்குகளை தூண்டும் கலாச்சார சீரழிவை விட்டும் நம்மை பாதுகாப்பானாக!

No comments: